டில்லி
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் நீக்கம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல சுற்றுலாத்தலங்கள், ரயில்கள் ஆகியவற்றில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. எனவே இது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது. ஆயினும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “விரைவில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் இனி அளிக்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் தேர்தல் விதிகள் காரணமாக இடம் பெறாது. இதற்கான ஏற்பாடுகள் கோவின் மென்பொருளில் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.