புதுடெல்லி: தனது சுதந்திர தின உரையில், பாகிஸ்தானுக்கு வாழ்த்து எதையும் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆப்கானிஸ்தானிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதானது இருநாடுகளுக்குமிடையே பதற்றத்தை அதிகரித்தது. தற்போது இந்தியாவின் முடிவுக்கு எதிராக பாகிஸ்தான் சர்வதேச அளவில் ஆதரவை திரட்டி வருகிறது.

ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு சுதந்திர தினம். ஆனால், மோடி அந்நாட்டைக் குறிப்பிடவில்லை. ஆனால், பாகிஸ்தானின் தலைவர்கள் தங்களின் சுதந்திர தின உரையில், தங்கள் நாட்டைப் பற்றி அதிகம் குறிப்பிடாமல் காஷ்மீர் குறித்தே அதிகம் பேசினர்.

ஆப்கன் குறித்து மோடி கூறியதாவது, “ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் சிறந்த அண்டை நாடு. அவர்கள் தங்களின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுள்ளார்.
இதன்மூலம், அந்நாட்டில் இந்தியாவின் பங்களிப்பு எந்தளவிற்கு உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளர் சர்வதேச உறவுகள் குறித்த ஆய்வாளர்கள்.

ஆகஸ்ட் 19ம் தேதி ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினம். கடந்த 1919ம் ஆண்டு ஆப்கன் மன்னர் அமானுல்லா ஷா, பிரிட்டனை தோற்கடித்தார். அதுமுதல் அந்நாட்டின் சுதந்திர தினம் கணக்கிடப்படுகிறது. அதேசமயம், ஆப்கானிஸ்தான் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த நாடும் அல்ல.