பாட்னா:
மோடி மந்திரம் தோல்வியுற்றது, அது ஒரு மாயை என்று பாட்னா சாகிப் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும், முன்னாள் பாஜக அமைச்சரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக எம்.பி.யாக இருந்த சத்ருகன்சின்ஹா, மோடி மற்றும் அமித்ஷாவின் மக்கள் விராத நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சித்ததன் காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதன் காரணமாக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது.
இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகி, ராகுலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே போட்டியிட்ட பாட்னா சாஹிப் தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கியது.
பாட்னா சாகிப் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் சத்ருகன்சின்ஹா, அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, மத்திய பாஜக அரசையும், மோடி மற்றும் அமித்ஷாவையும் கடுமையாக தாக்கினார்.
இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற கூறிய சத்ருகன்சின்ஹா “மோடி மந்திரம்” வீழ்ச்சியடைந்து விட்டது என்று கடுமையாக விமர்சித்தார். இன்றைய பாஜக தலைவர்கள் திமிர் பிடித்தவர்களாகவும் அதிகார தோரணையுடனேயே செயல்பட்டு வருவதாகவும், கட்சியின் தற்போதைய தலைவர்களிடையே தன்னிறைவு இல்லை, அகங்காரம் மற்றும் கோபமே அதிகமாக காணப்படுகிறது என்று குற்றம் சாட்டியவர், நாட்டின் ராணுவம் ஒன்று அல்லது இரண்டு மனிதர்களின் நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றும் காட்டமாக விமர்சித்தார்.
மேலும், மோடியின் ஆட்சியில் சர்வாதிகார பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற உத்தரவுகள் ஒரே இரவில் இயற்றப்பட்டன. ஆயுதப் படைகள் அரசியல்மயமாக்கப்பட்டன என்று விமர்சித்தவர் ராகுலின் தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது என்று புகழாரம் சூட்டினார்.
காங்கிரஸ் கட்சிக்கு இளந்தலைவர் ராகுல் தலைமையேற்ற பிறகு வலுவாக மாறியுள்ளதாக தெரிவித்தவர், அவர் தலைவராக பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்தன் மூலம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளார். இது மிகவும் உனனதமானது, இது அவரை ஒரு முன்மாதிரி அரசியல்வாதியாக காட்டுகிறது என்று பெருமிதமாக தெரிவித்தார்.
ஆனால், பாஜகவோ தேய்ந்து வருகிறது என்றவர், தான் தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலத்தை பாஜகவில் கழித்துவிட்டேன், தற்போது தாமதமாகவே காங்கிரஸ் கட்சிக்கு வந்திருக்கிறேன். இனிமேல் சிறப்பாக செய்லபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.