புனே: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5ம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கோவில் கட்ட ‘அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை மத்திய அரசு  கடந்த பிப்ரவரி மாதம் அமைத்தது.
கோவில் கட்டுமான முதல் கட்ட பணிகள், மார்ச் மாதம் நடந்தன. சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த தற்காலிக ராமர் கோவில், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கட்டுமான  பணிகளை துவங்க அடிக்கல் நாட்டு விழா நடத்த அறக்கட்டளை முடிவு செய்தது.
விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில், ஆகஸ்ட் 5ம் தேதி,  காலை, 11:00 மணி முதல் மதியம், 1:10 மணி வரை, பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க நேரம் ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புனேயில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பிரதமர் மோடி ஆகஸ்ட் 5ம் தேதி ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார்.  அடிக்கல் நாட்டும் முன், ராமர் மற்றும் ஹனுமான் காரி கோவிலில்  பிரதமர்  மோடி பிரார்த்தனை செய்வார். விழாவுக்கு பங்கேற்க அனைத்து முதலமைச்சர்களும் அழைக்கப்படுவார்கள் என்றார்.