டில்லி
தன்னை புகழ்வதை மட்டுமே பிரதமர் மோடி விரும்புவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சர்கார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று முன்தினம் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியின் இடையில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர் இதைச் சீர்திருத்த பிரதமர் அலுவலகத்தின் அதிகாரங்களை மற்ற அதிகாரமற்ற அமைச்சர்களுடன் பகிர வேண்டும் எனவும் அவர் கூறினார். அத்துடன் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் பிரதமருக்கு யோசனை தெரிவிக்கப் பயப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ரகுராம் ராஜன், “அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் கட்சியின் அரசியல் மற்றும் சமூகக் கொள்கைக்ளை உருவாக்கிய்வர்கள் ஆவார்கள். அத்துடன் தனிப்பட்ட முறையில் இவர்கள் அனைவரும் பொருளாதார சீர்திருத்த கருத்துக்களை கொண்டவர்கள். ஆனால் பிரதமரைச் சுற்றி உள்ளவர்கள் பலருக்குப் பொருளாதாரம் குறித்த சரியான் புரிந்துணர்வு இல்லை.
எனவே அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் மூலம் பொருளாதார சீர்திருத்தக் கருத்துக்களைச் செயல்படுத்த முடியும். அனைத்து அதிகாரங்களும் பிரதமரிடமே உள்ளதும், பல அமைச்சர்கள் அதிகாரமின்றி உள்ளதும் அரசுக்குச் சரியான வழிமுறையை அளிப்பதில்லை. ஆகையால் இது குறித்து பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான ஜவகர் சர்க்கார் ’பிரசார பாரதி’ அமைப்பில் தலைமை செயல் அதிகாரியாக 2012 முதல் 2016 வரை பணிபுரிந்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், “பிரதமரைச் சுற்றி உள்ள பொருளாதார ஆர்வலர்கள் மற்றும் அமைச்சர்கள் அவருக்கு அரசியலைப் பற்றி மட்டுமே அறிவுரை அளிக்கின்றனர் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நானும் இரண்டு வருடங்கள் மோடி அரசில் பணி புரிந்துள்ளேன். அவருக்கு ‘ஆமாம் சார், நீங்கள் கிரேட் சார்’ எனச் சொல்வது மட்டுமே பிடிக்கும். இதனால் இந்தியா துயரடைகிறது” எனப் பதிந்துள்ளார்.