பிரதமர் நரேந்திர மோடி எனது குடும்பம் தொடர்பாக மனதளவில் பீடிக்கப்பட்டிருக்கிறார். எனவேதான், எனது குடும்பத்தினர் குறித்து ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள ஒரு விரிவான நேர்காணலில், அவர் பலவிதமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவற்றின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.
‘ஐஎன்எஸ் விராத்’ போர்க்கப்பலில் விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் லட்சத் தீவுகளுக்கு நாங்கள் சென்றோம் என நரேந்திரமோடி கதைக் கட்டுகிறார். விடுமுறையைக் கழிப்பதற்காக எதற்கு போர்க் கப்பலில் செல்ல வேண்டும்?
அன்றைய நாளில் பிரதமராக இருந்த எனது தந்தை அலுவல்ரீதியாக அங்கே போர்க்கப்பலில் செல்லும்போது நானும் உடன் சென்றேன். அவ்வளவே..! மற்றபடி, 35 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு போர்க்கப்பல் எதற்காக, எந்த இடத்தில், எத்தனை நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதை என்னால் எப்படி இப்போது சொல்ல முடியும் என நினைக்கிறீர்கள்? இதை நீங்கள் கடற்படையிடமே கேட்டுக் கொள்ளலாமே?
இந்த நாட்டின் தேர்தலில் பேசப்பட வேண்டிய மிக முக்கிய விஷயங்களை திசைதிருப்புவதற்காக நரேந்திர மோடி இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வீசும் தூண்டிலில் உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களும் சிக்குகிறீர்கள்.
ஒரு நாட்டை ஆளும் தலைவர், எதிர்கால இலக்குகளை முன்வைத்து செயல்படலாம் அல்லது நிகழ்கால விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப நாட்டை வழிநடத்திச் செல்லலாம். கோட்பாட்டு ரீதியாக, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டையும் இணைத்தும்கூட தனது செயல்பாட்டை மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது நரேந்திர மோடி செய்துகொண்டிருப்பது என்ன?
எதிர்கால இலக்கும் இல்லை, நிகழ்கால முக்கியத்துவமும் இல்லை. இறந்தகால நிகழ்வுகளின் மீது பீடிக்கப்பட்டிருக்கிறார் நரேந்திர மோடி. அவர் அனைத்தையும் பின்னோக்கிப் பார்க்கிறார். பின்புற கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே இந்த நாடு எனும் பேருந்தை செலுத்தியிருக்கிறார் அந்த ஓட்டுநர். இதனால்தான், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற அவலங்களை மக்கள் சந்தித்தார்கள்.
இந்தியா இன்று சந்தித்துவரும் நிஜமான சவால்களை முன்னிறுத்தியே நாம் நமது பயணத்தை மேற்கொள்கிறோம். நமது இலக்கு எதிர்காலத்தை நோக்கியே. இறந்த காலத்தை நோக்கி இந்த நாட்டை இழுத்துச் செல்ல நாம் மோடியை அனுமதியோம்.
இறந்தவர்களை அவமதிக்கும் பழக்கம் இந்திய அரசியலில் இதுவரை இருந்ததில்லை என்ற கருத்து தவறானதே. நமது நாட்டின் மிகச்சிறந்த நெறிமுறை பிம்பமாக இருந்த மகாத்மா காந்தியை, ஆர்எஸ்எஸ் இயக்கம் எத்தனையோ முறை அவமதித்துள்ளது.
காந்தியைக் கொன்ற நபரை புனிதராக அவர்கள் போற்றி வருவதோடு, அந்த நபருக்காக கோயிலையே கட்டி கெளரவப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டில் வெறுப்பு மற்றும் பிரிவினைக்கான கோட்பாடு இருந்து வருகிறது. இது ஒரு தனிநபருக்குள் உள்ளார்ந்து தொடங்குகிறது.
நீங்கள் உங்களையே வெறுக்காமல் பிறரை வெறுக்க முடியாது என்பதே உண்மை. எப்போது நீங்கள் உங்களையே உள்ளார்ந்து வெறுக்கத் துவங்குகிறீர்களோ, அப்போதுதான் பிறரையும் வெறுக்கும் நிலை ஆரம்பாகிறது. எனவே, மோடியின் பிரச்சினை என்பது அவர் தன்னைத்தானே வெறுப்பதுதான்.
ஆனால், மோடி தன் சுயத்தை மிகவும் விரும்புபவர் என்ற பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் அவர், மேலோட்டமான அளவில் மட்டுமே தன்னை விரும்புகிறார். அவரிடமிருந்து வெளிப்படும் பெரியளவிலான இறுமாப்பு அனைத்திற்கும் அவருள் இருக்கும் பயம்தான் காரணம். அவர் தன்னை வெறுப்பதிலிருந்துதான் அந்த பயம் தோன்றுகிறது. பயம்தான் அனைத்து எதிர்மறை உணர்வெழுச்சிகளுக்கான ஒரு மூல ஆதார வளம்.
நான் மோடியை வெறுக்கவில்லை; என்னால் அப்படி வெறுக்கவும் முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். எனவே, என் மீதும் என் குடும்பத்தின் மீதும் மோடி சேற்றை வாரி இறைக்கும்போது, என்னால் அவரை நோக்கி சிரிக்கத்தான் முடிகிறது. நான் கோபத்தை என்னோடு இணைத்துக் கொள்வதில்லை மற்றும் கோபத்திற்கு நான் பதிலளிப்பதுமில்லை.
மோடியின் உள்ளுக்குள் இருக்கும் கோபம் அவருக்குத்தான் தீங்கை அளிக்கும். அதேசமயம், அதை நான் பற்றிக் கொண்டால் எனக்கும் கெடுதல்.
மோடியைப் பொறுத்தவரை, அவர் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார். தான் வழங்குவதாக சொன்ன ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள், வங்கியில் போடுவதாக சொன்ன ரூ.15 லட்சம், விவசாயிகளுக்கு அவர் இழைத்த அநீதி போன்ற எந்த விஷயங்களுக்கும் மோடியால் பதிலளிக்க முடியாது. மேலும், ரஃபேல் தொடர்பாகவும் அவரால் எதுவும் பேச இயலாது.
ஆனால், நாங்களோ விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருடன் நேரடியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அவர்களிடமே கேட்கிறோம். இறந்த காலத்தைப் பற்றி பேசுவதை விடுத்து, எதிர்காலம் குறித்து அவர்களிடம் கேட்கிறோம். அவர்களின் விருப்பங்களை எங்களின் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளோம்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியால் சிக்க வைக்கப்பட்டிருக்கவில்லை. அவர் இந்திய மக்களுடைய குரலின் மூலம் சிக்கவைக்கப்பட்டுள்ளார். எனவே, என்னதான் ஆழமான இறந்த காலத்திற்குள் அவர் ஓடி மறைய முயன்றாலும், அவரால் எதிலிருந்தும் தப்பிக்க முடியாது.
மோடி என் குடும்பம் குறித்து தேவையில்லாமல் பீடிக்கப்பட்டிருக்கிறார். நானே அவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கவில்லை. எனது தந்தை குறித்தோ, பாட்டி குறித்தோ அல்லது எனது கொள்ளு தாத்தா குறித்தோ நான் சிந்திப்பது கிடையாது. ஆனால், மோடி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில், அதன்மூலம் அவர் தப்பிக்க நினைக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..!
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோர் என்னைப் பிரதமராக முன்மொழிவது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அந்த தலைவர்களின் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளேன். ஆனால், யார் பிரதமராக வர வேண்டுமென்பதை உண்மையில் முடிவு செய்பவர்கள் மக்களே. அந்த மக்களின் முடிவை நான் மதிப்பேன். வரும் மே 23ம் தேதி மக்களின் முடிவு மிகத் தெளிவாக வெளிப்படும்.
நாட்டில் பல்வேறு மாறுபட்ட குரல்கள் ஒலிக்கலாம். அதுதான் இந்த நாட்டின் அடையாளம். அத்தகைய மாறுபட்ட குரல்களை ஒருங்கிணைத்து, சிறந்த உரையாடலாக மாற்றி, அதை நாட்டின் வளர்ச்சிக்கேற்ற வகையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.
அதேசமயம், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு கட்சிகளுடன், நாங்கள் கொள்கைப் போரை மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நரேந்திர மோடி என்பவர் ஒரு தனி மனிதர் என்றாலும், அவர் ஒரு சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஒரு தனி மனிதர் என்ற முறையில் அவரின் மீது நான் அன்பு செலுத்துகிறேன். எந்த ஒரு தனிமனிதரையும் என்னால் வெறுக்க முடியாது. ஆனால், மோசமான சித்தாந்தங்களை மட்டுமே நான் எதிர்க்கிறேன்.
காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்தியாவின் நிறுவனங்களை சிதைக்காமல், அவை சுதந்திரமான முறையில் தொடர்ந்து இயங்க வேண்டுமென விரும்புகிறோம். ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் நரேந்திர மோடி போன்றோர் நினைப்பது என்ன?
இந்தியாவின் தன்னாட்சி நிறுவனங்களை சிதைத்து, அவைகளை தமக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைக்கிறார்கள். இங்கேதான் கொள்கைப் போர் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுடன் நாங்கள் எப்படி சமரசம் செய்துகொள்ள முடியும்?
மோடி எப்போதுமே விடுமுறை எடுக்காமல், போதுமான நேரம் உறங்காமல் நாட்டிற்காக உழைக்கிறார் என்ற கோஷத்தை நாம் வேறுவிதமாக மதிப்பிட வேண்டும். முதலில், உழைப்பு என்பது என்ன? கேமரா முன்பாக வருவதும், அங்கும் இங்கும் பயணம் செய்வது மட்டும்தானா?
நாட்டிற்கு தேவையான உண்மையான உழைப்பு என்பது, நாட்டு மக்களின் கருத்துகளை கேட்டு, அவற்றை நாட்டு முன்னேற்றத்திற்கான திட்டமிடலில் சேர்க்க வேண்டும். இதுதான் நாட்டிற்கு தேவையான உழைப்பு. அந்தவகையில் பார்க்கையில், தற்போது நநேரந்திர மோடி செலுத்தும் உழைப்பைவிட, இந்த நாட்டிற்காக நான் 10 மடங்கு அதிக உழைப்பை செலுத்துகிறேன் என்பதை உங்களிடம் சவால் விட்டு கூறிக்கொள்கிறேன்.
இதை நிரூபிக்க, ஊழல், வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை மற்றும் சர்வதேச உறவுகள் ஆகியவை குறித்து என்னிடம் விவாதம் செய்யுமாறு நான் மோடியை கேட்டுக் கொண்டேன்.
நான் எங்கும் பயந்து ஓடவில்லை; மோடிதான் பேசுவதற்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், அவரிடம் எந்த திட்டமும் இல்லை, எந்த பதிலும் இல்லை.
என்னைப் பொறுத்தவரை, எனது சிந்தனையெல்லாம் எப்படி மாறுபட்ட எண்ணங்களை ஒருங்கிணைத்து, அவற்றை நாட்டின் நலனுக்கேற்ற திட்டங்களை வகுக்க பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் இருக்கிறது.
நீங்கள் வேண்டுமானால் என்னிடம் அமர்ந்து காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசுங்கள். அப்பிரச்சினையை ஆக்கப்பூர்வமான முறையில் கையாள காங்கிரஸ் கட்சி என்ன திட்டங்களை வைத்துள்ளது என்பது குறித்து நான் விளக்குகிறேன்.
இதுமட்டுமல்ல, வேலைவாய்ப்பு, விவவசாயம் மற்றும் பொருளாதாரம் போன்ற எதைப்பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள்.
நரேந்திர மோடி, எப்போதும் வீழ்த்தப்பட முடியாதவர் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஊடகங்களாகிய நீங்கள்தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், குஜராத் தேர்தலில் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்ற அளவில் வெற்றி பெற்றார்கள்.
பின்னர் கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலெல்லாம் என்ன ஆனது?
ஆனால், அதுபோலத்தான் இப்போதும் சொல்கிறீர்கள்; மோடியை 2019 தேர்தலில் வீழ்த்த முடியாது என்று. எனவே, மே மாதம் 23ம் தேதி வரை காத்திருங்கள்.
‘மோடி வீழ்த்தப்பட முடியாதவர்’ என்ற ஒரு கோஷம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. அதேபோன்று, அமித்ஷாவின் வியூகங்கள் தேர்தலில் கட்டாயம் வெற்றியைத் தரும் என்ற கோஷமும் திட்டமிட்டு கட்டமைக்கப்படுவதுதான். இந்த போலி கோஷங்கள் எல்லாம் வரும் தேர்தலில் உடைக்கப்படும்.
இந்த கோஷத்தை நாங்கள் ஏற்கனவே பொய்யாக்கி உள்ளோம். எனவே, அந்த பயத்தில்தான் தற்போது மோடி எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தெரியும், அவரின் ஆட்டம் முடியப்போகிறதென்று..!
– மதுரை மாயாண்டி