டில்லி

ற்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளில் இருந்து பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.   இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

மோடி தனது உரையில், “காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்ப்புகளைத் தூண்டி வருகின்றன.  எந்த ஒரு இந்தியக் குடிமகனையும் குடியுரிமை சட்டம் பாதிக்காது.   அத்துடன் இச்சட்டம் சிறுபான்மையினருக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது.  பதவியில் இருந்து இந்திய மக்களால் விலக்கப்பட்டவர்கள் தற்போது இவ்வாறு செய்கின்றனர்.

எதிர்க்கட்சியினர் குடிமக்களை மத ரீதியாக பார்க்கிறார்களே தவிர நாங்கள் அனைவரையும் இந்தியர்களாக மட்டுமே பார்க்கிறோம்.” எனத் தெரிவித்ததுடன் ஜவகர்லால் நேரு, பிரிவினை மற்றும் 1976 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசர நிலை, மற்றும் 1984 சிக்கிய கலவரங்கள் ஆகியவை குறித்துப் பேசி காங்கிரஸைக் கடுமையாக தாக்கினார்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்,”இன்றைய நிலையில் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினைகளாக வேலையின்மை மற்றும் தொழில் துறை முடக்கம் உள்ளது.  நாங்கள் இது குறித்து பிரதமர் மோடியிடம் பலமுறை கேட்ட போது அதற்கு ஒரு முறைகூட பதில் அளிக்கவில்லை.

அதற்கு மாறாக காங்கிரஸ், ஜவகர்லால் நேரு, பாகிஸ்தான் ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்.   அதாவது முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி வருகிறார்.  இதுவே அவரது முக்கிய நோக்கம் மற்றும் முக்கிய பணி ஆகும்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நீண்ட உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.  அத்தனை நீண்ட உரையில் அவர் ஒரு முறை கூட வேலையின்மை பிரச்சினையைக் குறிப்பிடவில்லை.  அது குறித்து மோடியின் வழியில் அவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” எனத் தெரிவித்தார்.