பதான்கோட்
மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் நிலையில் பாஜக இங்கு ஆட்சியைப் பிடிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. பாஜகவுக்காகப் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் என பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஒரு பிரச்சார பொதுக் கூட்டத்தில், “பிரதமர் மோடியால் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய ரூ.14000 கோடியைத் தர முடியவில்லை என சொல்கிறார். ஆனால் அவர் தனக்கு ரூ.16000 கோடி செலவு செய்து தனி விமானம் வாங்கி உள்ளார்.
இப்போது தேர்தலுக்காக மோடி பஞ்சாப் மக்களிடம் தலை வணங்கிப் பேசி வருகிறார். அவர் ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கியவர் தான் என்பதை மறுக்க முடியாது. பஞ்சாப் மாநிலத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் மோடி தனது வீட்டில் இருந்து 5 கிமீ தூரத்தில் போராடிய விவசாயிகளைக் காண வரவில்லை” எனப் பேசி உள்ளார்.