டெல்லி: மோடி அரசாங்கத்தின் ஆணவம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தும், அடங்காத மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 42வது நாளாக நீடித்து வருகிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர், அதேசமயம் மத்திய அரசோ வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயார், ஆனால் சட்டங்களை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் 8ந்தேதி அன்று 8ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கடும் குளிர் காரணமாக இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, மத்தியஅரசின் ஆணவப்போக்கை கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில், மோடி அரசாங்கத்தின் அக்கறையின்மையும், ஆணவமும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பறித்தன. அவர்களின் (விவசாயிகள்) கண்ணீரைத் துடைப்பதற்கு பதில், மத்திய அரசு கண்ணீர் புகை குண்டுகளால் அவர்களை தாக்குவதில் பிசியாக உள்ளது. இத்தகைய மிருகத்தனம், தங்களின் நட்புக்குரிய தொழில் முதலாளிகளின் வணிக நலன்களை மேம்படுத்துதற்காக மட்டுமே. வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க என்று பதிவு செய்து இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “உழவினார் கைம்மடங்கின் இல்லை” – என்ற திருக்குறளை சுட்டிக்காட்டியுள்ள அவர், விவசாயிகளின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது எனவும், இறுதியில் விவசாயிகளே வெற்றி பெறுவர் எனவும் கருத்து பதிவிட்டுள்ளார்.