கொல்கத்தா: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களைப் பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான அபிஜித் பானர்ஜி.
பிபிசி நிறுவனத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழை மக்களைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு நல்ல தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டுமென அவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, இந்த நோய் நம்மிடம்தான் இருக்கும். எனவே, மக்களுக்கான அரசின் நடவடிக்கைகள் பெருந்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்படும் பாதிப்புகள், அந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்திய மக்கள் தற்போது கடுமையான வருவாய் இழப்பில் சிக்கியுள்ளார்கள். அவர்களுக்கான, உடனடி நிவாரணத்தை அரசு அளித்தாக வேண்டியுள்ளது” என்றுள்ளார் அவர்.