புதுடெல்லி: லடாக்கில், இந்தியா – சீனா இடையே பெரியளவிலான மோதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று லடாக் பகுதி அரசியல்வாதிகளிடமிருந்து(பாரதீய ஜனதாவினர் உட்பட) தொடர் எச்சரிக்கைகள் வந்துகொண்டிருந்ததாகவும், ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் அவற்றை அலட்சியமாக நிராகரித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த பல ஆண்டுகளாகவே, லடாக்கில், சீன எல்லைப்பகுதிக்கு அருகே வாழும் மக்கள் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் மதிப்புவாய்ந்த மேய்ச்சல் நிலங்களை, ஊடுருவும் அண்டைநாட்டு ராணுவ வீரர்களிடம் இழந்து வருகின்றனர்.
கடந்த பல வாரங்களாகவே நிலைமை மோசமடைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக, எல்லைப்பகுதி கிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்தொடர்பு வசதிகளை நிறுத்திவைக்கும் வகையில், அதிகாரிகள் அப்பகுதியின் மொபைல் அலைவரிசை கோபுரங்களை முடக்கிவிட்டனர்.
பல மக்களால், தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்ல முடியவில்லை. காரணம், அதிகளவு ராணுவத்தினர் நடமாட்டம். எனவே, பலர் வேறுஇடங்களுக்கு இடம்பெயர்தலைப் பற்றி தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
முந்தைய ஆண்டுகளில் பலமுறை சீனர்கள், இந்தியப் பகுதிகளில் ஊருடுவி வந்துள்ள போதிலும், நிலைமை இந்தளவிற்கு மோசமானதில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சீன ஊடுருவல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. நாங்கள் தொடர்ந்து இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தோம். ஆனால், எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை என்கின்றனர் அவர்கள்.