டில்லி

த்திய பாஜக அரசுக்கு முன்னெச்சரிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது.  இது குறித்து முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.  அந்த கட்டுரையில் காணப்படும் விவரங்களை இங்கே பார்ப்போம்.

”கடந்த மார்ச் 19 அதாவது வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மக்கள் ஊரடங்கு மார்ச் 22 ஞாயிறு அன்று நடைபெறும் என அறிவித்தார்.   நான் இது ஒரு சோதனை எனவும் ஊரடங்கு முடிந்ததும் முழு அடைப்பு குறித்து அறிவிப்பார் என எண்ணி இருந்தேன்.  ஆனால் ஞாயிறு அன்று எவ்வித அறிவிப்பும் இல்லை.

மார்ச் 20 முதல் மார்ச் 23 ஆம்தேதி வரை ஒரு சில மநில அரசுகள் பகுதி அல்லது முழு அடைப்பைப் பல இடங்களில் அறிவித்தன. மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதி ஒரு  சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டது மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை சற்றே அதிகரித்தது.  ஆயினும் சொல்லிக் கொள்ளும்படி எந்த அறிவிப்பும் வரவில்லை.

ஒருவேளை இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரான் நாடுகளில் நடப்பதால் எச்சரிக்கை அடைந்ததால் பிரதமர் மார்ச் 24 ஆம் தேதி தேசிய அளவில் அன்று இரவு 12 மணிமுதல் முழு அடைப்பு தொடங்கும் எனத் தெரிவித்தார்.  சரியாகச் சொன்னால் ஐந்தாம் நாள் தொடங்கும் போது இந்த தேசிய ஊரடங்கு தொடங்கி உள்ளது.  அப்போது நாடு மட்டும் அல்ல மத்திய அரசும் மத்திய அரசும் தேசிய ஊரடங்குக்கு தயாராகைல்லை.  அப்படி இருக்க மார்ச் 19 அன்று பிரதமர் அமைத்த பொருளாதார பணிக் குழு எப்படி பணியைத் தொடங்க முடியும்?

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்  நோயாளி குறித்த செய்தி வந்ததில் இருந்தே முன்னெச்சரிக்கை இன்மை என்பது மோடி அரசின் அடையாளமாக ஆகி விட்டது வருந்தத்தக்கதாகும்.

போதுமான சோதனை செய்யாதது முதல் தோல்வி ஆகும்.  பல தொற்று நோய் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு அதிக சோதனை குறித்து அறிந்திருக்கவில்லை.   அப்போது சோதனை,மீண்டும் சோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை அளித்தல் ஆகியவை முக்கிய தேவையாக இருந்தது.  ஆனால் அரசு இதில் தோல்வி அடைந்துள்ளது.

எனக்குத் தெரிந்த வரை ஒரு நாளில் 12000 சோதனைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.  ஆனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருந்தன. அது மட்டுமின்றி ஐ சி எம் ஆர் இல் அப்போது நடந்த பதவி மாற்றங்கள் மேலும் குழப்பத்தை அதிகமாக்கியது.  அப்போதும் ஒரு தெளிவில்லாத நிலை இருந்தது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்த பிறகும், ஒவ்வொரு தினமும் பல புதிய புதிய இடங்களில் பாதிப்பு குறித்த தகவல் வந்த போதும் ஐசிஎம்ஆர் மற்றும் சுகாதார அமைச்சரவை இந்தியா இன்னும் 2 ஆம் நிலையில் உள்ளதாகவும் சமுதாய தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிவித்ததைப் பல தொற்று நோய் நிபுணர்களும் சந்தேகித்தனர்.

இந்தியாவுக்கு 7 லட்சம் பிபிஇ சூட்டுகள், 60 லட்சம், என் 95 முக கவசங்கள் மற்றும் ஒரு கோடி 3 அடுக்கு முக கவசங்கள் தேவையாக இருந்தன. ஆனால் நம்மிடம் இப்போது எவ்வளவு உள்ளன என்பதும் இன்னும் எவ்வளவு தேவை என்பது குறித்த விவரமும் தெரியவில்லை.

உடனடியாக ஏற்றுமதி தடை விதிக்க வேண்டிய வெண்டிலேட்டர்கள், மூச்சுக் கருவிகள் மற்றும் சானிடைசர்களுக்கு மார்ச் 24 ஆம் தேதி அன்று ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது.

விநியோக சங்கிலி மிகவும் பாதிக்கப்பட்டது.  பல மளிகைக்கடைகள் விநியோகம் இல்லாமல் மூடப்பட்டன.  ஒரு சில கடைகளில் சிப்பந்திகள் வர அனுமதிக்கப்படவில்லை.

பல சிறு குழந்தைகளும் வீட்டில் வசதி இல்லாததால் உணவு உணாத நிலை ஏற்பட்டதும் வெளி மாநில தொழிலாளர்கள் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்கு நடந்தே செல்வதும், அரசு அவர்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதைக் காட்டி நம் மனதை வருந்தச் செய்தது .

காவல்துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றாலும் அவர்களுக்கும் சரியான உத்தரவு அளிக்கப்படவில்லை.  பல இடங்களில் காவல்துறையினர் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வோரைத் தடுத்ததும், மளிகைக் கடைக்குச் செல்வோரைத் தாக்கியதும் நடந்துள்ளது. வைரலாகி வரும் இந்த காவல்துறை தாக்குதல் வீடியோ பலரையும் அச்சம் கொள்ள வைத்தது.

முக்கியமான தோல்வி என்னவென்றால் முழு அடைப்பை அறிவிக்கும் போதே ஏழைகளான குத்தகை விவசாயிகள் விவசாயக்கூலிகள், தினக்கூலிகள், சுயதொழில் புரிவோர், வீடற்றோர், பணி இழந்த ஊழியர்கள், உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தைக் காக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காததே ஆகும்.   இதைப் போல் ஊதியம் அளிக்க வேண்டிய பணி அளிப்போர், வரி செலுத்துவோர், கடன் வாங்கி தவணை செலுத்துவோருக்கான நிவாரண நடவடிக்கைகளையும் அறிவிக்கவில்லை.

பல யோசனைகள் அளிக்கப்பட்டும் அது குறித்து அரசு மார்ச் 26 வரை முடிவு எடுக்கவில்லை. பொருளாதார நடவடிக்கை திட்டம் என்பது நிதி அமைச்சரின் அரைகுறை நடவடிக்கைகளாக இருந்தனவே தவிர முழு நிவாரணம் அளிக்கவில்லை.  இந்த திட்டம் மக்களுக்கு உணவளிக்க உருவாக்கப்பட்டது என்றாலும் அதற்கான பணத்தாய் மக்களுக்கு  அளிக்கவில்லை.   இந்த திட்டத்தில் பல பிரிவினரைச் சேர்க்காதது மேலும் குழப்பத்தை அளித்தது.  அப்போது மாதத் தவணை ஜிஎஸ்டி குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

அரசு அறிவித்ததை விட ரூ.1.7 லட்சம் கூடுதல் நிதி மற்றும் ரூ.40000 கோடி  பதிப்பிலான உணவுப் பொருட்கள் அவசியத் தேவை ஆகும்.  இது தேவை என்றாலும் போதுமானதாக இருக்காது.  விரைவில் புதிய திட்டம் ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும்.

பலரும் சீனா, இத்தாலி அல்லது ஸ்பெயின் அளவுக்கு இந்தியா பாதிப்பு அடையவில்லை எனத் தவறாக நம்புகின்றனர்.  ஆனால் இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல் பாதிப்பு அடைந்துள்ளது.  நாம் தற்போது வாழ்வாதாரம், சுகாதாரம் பற்றி மட்டும் கவனித்து வருகிறோம்.  ஆனால் பொருளாதாரம், பணி மற்றும் வருமானம் போன்ற பல விவகாரங்களும் உள்ளன.  ஏற்கனவே உள்ள பொருளாதார சரிவு மேலும் அதிகரித்து மக்களின் துயரமும் அதிகரிக்கக் கூடும்.  அரசு தனது தயக்கங்களை விடுத்து தைரியமான முடிவு எடுக்கக் கூடிய தலைமையை அளிக்க வேண்டும்”

என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.