டில்லி
இந்திய வரலாற்றை மாற்றி எழுத கல்வியாளர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய டில்லியில் ஒரு வெள்ளை மாளிகையில் கல்வி அறிஞர்கள் கூட்டம் ஒன்றை நிகழ்த்தினர் அந்தக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதோ, எதற்காக அந்தக் கூட்டம் கூட்டபட்டது என்பதோ ரகசியமாகவே இருந்தது. தற்போது அந்த விவகாரங்கள் வெளியாகி உள்ளன.
இந்திய வரலாற்றை மாற்றி எழுத ஒரு குழு அமைப்பது குறித்து ஆராயவே அந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தின் பரிந்துரையின் படி பிரதமர் மோடி இந்திய வரலாற்றை மாற்றி எழுத ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு குழு அமைத்துள்ளார். இந்தக் குழுவின் மூலம் இந்து மதத்தவர் இந்த மண்ணில் ஆரம்பத்தில் இருந்தே வசித்து வருவதாக வரலாறு மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டம் தெர்வித்துள்ளனர். இஸ்லாமியக் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி, ”இந்தியாவின் விடுதலைக்கு அதிகம் பாடுபட்டவர்கள் இஸ்லாமியர்களே. அவர்களை இந்த அரசு இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற எண்ணுகிறது. வரலாற்றை மாற்றி எழுதுவது அதற்கான ஒரு வழி ஆகும். புதிய வரலாற்றில் இஸ்லாமியர்கள் நாட்டுப் பற்று இல்லாதவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்” என கூறி உள்ளார்.
ஆனால் இதை ஆர் எஸ் எஸ் அமைப்பு உட்பட பல இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆர் எஸ் எஸ் செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, “இந்திய வரலாற்றின் உண்மையான நிறம் காவி நிறம் ஆகும். இந்திய வரலாற்றில் தவறாக உள்ள பல தகவல்களை சரியாக மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்து மத புராணங்கள் என்பது உண்மையான வரலாறு ஆகும். குரான் மற்றும் பைபிள் உலக வராலாற்றில் இருக்கும் போது இந்து மத நூல்கள் இருப்பதில் பிழை இல்லை” எனக் கூறி உள்ளார்.
இந்தக் குழுவைப் பற்றி அறிவித்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, “இந்தக் குழு பள்ளிப் பாட புத்தகங்களில் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் உட்பட பலவற்றையும் ஆராய்ந்து வருகிறது. அரசின் ஆவணங்களையும் ஆராய்ந்ததில் சுமார் 12000 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்துக் கலாச்சாரம் உள்ளதை குழு கண்டறிந்துள்ளது. மத்திய ஆசியாவில் இருந்து சுமார் 3000 அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்கள் வந்ததாக கூறுவது தவறு எனக் கூறி உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர், “வலது சாரி சிந்தனை உள்ள இந்துக்கள் இந்திய வரலாற்றில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறுவதன் மூலம் இந்தியாவே தங்களுடையது எனக் கூறக்கூடும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக நாட்டு மக்கள் நாட்டின் பன்முகத் தன்மையை ஒப்புக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அதை மோடி அரசு மாற்ற நினைக்கிறது.” எனக் கூறி உள்ளார்.