டெல்லி:

ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியில் பணமதிப்பிழப்பு குறித்த அதிர்ச்சி அறிவிப்பு மூலம் ஏற்பட்ட பண பற்றாறையால் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடி தற்போது வரை நீடிக்கிறது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை போதுமான அளவு அச்சடிக்க முடியாமல் ரிசர்வ் வங்கி திணறி வருகிறது.


இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பியுள்ள ஒரு அறிக்கையில் உள்ள தகவல்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் கணக்கில் இல்லாத பணம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்த்து இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய அரசை எச்சரித்தோம். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, மதிப்புக்கு நிகராக புதிய நோட்டுக்களை உடனடியாக மாற்றி வழங்குவது சாத்தியமில்லை. எனினும் இதை சமாளித்துவிடலாம் என்று எண்ணியிருந்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை வங்கி தொழிற்சங்கங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு நுழைந்து பணமதிப்பிழப்பை அறிவித்தது தங்களுக்கு வலியை ஏற்படுத்தியதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைப்பு அளித்து பணியாற்றினோம். அதன் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடவில்லை என்று தெரிவித்து வருகிறது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இது போன்ற ஒரு ஒத்துழைப்பு சில சிக்கலான முடிவுகளை எடுக்கும் போது அவசியம். போர் சமயங்களில் செயல்படுவது போல் தற்போது செயல்பட வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.