புதுடெல்லி:

மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு உதவக்கூடியவை என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால், வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கானவை, அவர்களின் வருவாயை அதிகப்படுத்தும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, வரம்பு மீறிச் செயல்பட்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் இடைநீக்கம் செய்துள்ளார். 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் வரை யாரும் அவைக்குள் செல்லமாட்டோம் என எதிர்க்கட்சி்கள் புறக்கணிப்பு செய்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் இந்தியில் பதிவிட்ட கருத்தில், “ 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, அளித்த தேர்தல் வாக்குறுதியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வோம் என்று மோடிஜி பேசினார்.

ஆனால், 2015-ம் ஆண்டு நீதிமன்றத்தில், சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க முடியாது என்று மோடி அரசு தெரிவித்தது. 2020-ம் ஆண்டு கறுப்பு வேளாண்மைச் சட்டங்கள் வந்துள்ளன.

மோடிஜியின் உள்நோக்கம் தெளிவாக இருக்கிறது. அவர் தன்னுடைய புதிய வேளாண் பரிசோதனையைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய பெருமுதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு விலை கொடுக்கிறார். அவர்களுக்காகவே பணியாற்றி வருகிறது மோடி அரசு” என்று தெரிவிதித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் மத்திய அரசு வெளியிட்ட ஒரு தேசம், ஒரு சந்தை விளம்பரம் குறித்து ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் இயக்கத்தைத் திரட்டி, 2 கோடி விவசாயிகளின் கையொப்பத்தைப் பெற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.