சென்னை: மோடி அரசு புதிய வங்கிகளை உருவாக்குவதற்கு பதில் வங்கிகளை விற்பனை செய்வது மக்கள் விரோதச்செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவையும் தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சந்தை முதலீடு ரூ.31 ஆயிரத்து 641 கோடி ஆகும். இரண்டு வங்கிகளையும் சேர்த்து மொத்த சந்தை மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி. எல்.ஐ.சி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி ரூ.1.75 லட்சம் கோடிகளை திரட்டுவதே மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, 6 பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக, வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, 6 பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக, வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்து பேங்க், யூகோ பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை தனியாருக்கு விற்பனை செய்வது என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற லாபத்தில் இயங்கும் வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இதுவரை பதில் இல்லை. எனினும் ஆண்டுக்கு 2 பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், 2021-22 ஆண்டில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுதவிர, மாநில கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகளையும் தனியார் மயமாக்குவது தொடர்பாகச் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழகத்தின் பாரம்பரிய வங்கியாகும். கடந்த 10.02.1939 ஆம் ஆண்டு எம்சிடிஎம். சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டு, 1969 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, தமிழ்நாட்டின் பெரும் நகரங்களில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை 1,500 கிளைகள் உள்ளன.
பிற கிளைகளுக்குப் பணம் செலுத்தும் போதும், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகளுக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும் சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளில் இந்த சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆற்றி வரும் சேவை மகத்தானது. குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சம்பளம் போன்ற எண்ணற்ற சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதுவரை ஒரு வங்கியைக் கூட உருவாக்காத மோடி அரசு, மக்களுக்கு சேவை செய்து கொண்டும், அதேசமயம் லாபத்திலும் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் போன்ற வங்கிகளை விற்க முயல்வது மக்கள் விரோதப் போக்காகும். மக்களுக்காக உருவாக்கப்பட்ட வங்கி முறையையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பெரும் பணக்காரர்களுக்கான வங்கிகளாக மாற்றுவதே மோடி அரசின் திட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் தனியார் வங்கிகள் மக்களிடம் எந்த வகையில் எல்லாம் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்பது ஊரறிந்த உண்மை.
இந்த நிலையில், மக்களுக்காகச் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்றால், அவை எந்த வகையில் மக்களுக்குப் பயன்படும் ?
எனவே, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 26 ஆயிரம் ஊழியர்களும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 33 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மோடி அரசின் முடிவால், இந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாரிடம் விற்றால், தமிழகத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க உறுதுணையாக இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசின் சர்வாதிகார, எதேச்சதிகார, மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்களும், அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.