டில்லி,
ருடத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது.
ரூ..10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் காஸ் மானியம் தானாகவே ரத்து செய்யப்பட்டு விடும் இதற்கான அதிரடி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.
தற்போது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் அரசு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
பாரதியஜனதா அரசு பொறுப்பேற்ற உடனே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல், வசதி படைத்த வர்கள் காஸ் மானியத்தை விட்டுக்கொடுத்து, ஏழை மக்கள் பயன்பெற உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவராக இருப்பின் அவர்களுக்கு சமையல் காஸ் மானி யம் வழங்கப்பட மாட்டாது என்றும், அவர்கள் தாமாக முன்வந்து காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏற்கனவே கேட்டுக்கொண்டது.
ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிட்டவில்லை. அதன் காரணமாக அதிரடி நடவடிக்கையில் இறங்கி வருகிறது. இதனையடுத்து ரூ.10 லட்சத்துக்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் காஸ் மானி யத்தை அதிரடியாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதற்கேற்றார்போல், வருமானவரித்துறை, பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு  மத்திய நேரடி வரிகள் வாரியமும் ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு துறைகளுக்கிடையே விரைவில் கையெழுத்தாகும் என தெரிகிறது. இதன்படி  ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பிறந்த தேதி, பான் எண், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை வருமானவரித்துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும்.
இதன்மூலம் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் காஸ் மானியம் தானாகவே ரத்து செய்யப்பட்டு விடும்.
இந்த நடவடிக்கை 2017ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என பெட்ரோலியத்துறை அதிகாரி தெரிவித்தார்