மாலே:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்  சுற்றுப்பயணமாக நேற்று மாலத்தீவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு  மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் , நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பயங்கரவாதம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார்.

இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, முதல் வெளிநாடு சுற்றுப்பயணமாக நேற்று  மாலத்தீவு சென்றடைந்தார். மாலே விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

மாலத்தீவின் நாட்டின் முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுடன் மிகுந்த நட்புறவு பாராட்டி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற  அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்து இப்ராகிம் முகமது சோலி வென்றார். அதைத்தொடர்ந்து தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தார்.

இதைத்தொடர்ந்து, இந்தியா, சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கிற வகையில், மாலத்தீவில் அதிநவீன ‘ரேடார்’ அமைப்பை நிறுவவும் உதவு புரிந்தார். இதன் காரணமாக இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கை ஓங்கி இருக்க மாலத்தீவு பக்க பலமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக  மீண்டும் பிரதமரான பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்கு மாலத்தீவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக  கூறப்பட்டது. அதன்படி, முன்னதாக நேற்று காலை கேரளாவுக்கு சென்று புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்ததுடன், துலாபாரமாக தனது எடைக்கு எடை தாமரை பூக்களை வழங்கினார். பொதுக்கூட்டம் ஒன்றிலும் அவர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு தனி விமானத்தில் சென்றார்.

மாலே நகரில் உள்ள வேலனா சர்வதேச விமானம் நிலையத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடியை, அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அப்துல்லா சாகித், இந்திய தூதர் சஞ்சய் சுதிர்  வரவேற்றனர். தொடர்ந்து அங்குள்ள குடியரசு சதுக்கத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது, மாலத்தீவு நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலி நேரில் வரவேற்றார். அத்துடன் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அங்கு பிரதமர் மோடியும், அதிபர் இப்ராகிம் முகமது சோலியும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பு தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அப்போது ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதையடுத்து அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அரசு வழங்கக்கூடிய உயரிய விருதை (‘ரூல் ஆப் நிஷான் இஜ்ஜூதீன்’) பிரதமர் மோடிக்கு அதிபர் இப்ராகிம் முகமது சோலி வழங்கி கவுரவித்தார்.

அப்போது,  கிரிக்கெட் ரசிகரான அதிபர் சோலிக்கு, பிரதமர் மோடி அன்புப்பரிசாக ஒரு கிரிக்கெட் மட்டையை வழங்கினார்.

அப்போது பேசிய மோடி, “கடல்சார்பு மற்றும் ராணுவ உறவு முக்கிய முன்னுரிமையை கொண்டுள்ளது. ரேடார் அமைப்பு கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும். சாத்தியமாகக்கூடிய அனைத்து விதத்திலும் மாலத்தீவுக்கு இந்தியா உதவும்” என கூறினார்.

தொடர்ந்து  கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பையும், மாலத்தீவு படைகளுக்கான கூட்டுப்பயிற்சி மையத்தையும், இரு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணிக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றினார். அப்போது அவர், “மாலத்தீவு பழங்கால ஆபரணம் போன்றது. இரு தரப்பு உறவு தனித்துவமானது. பிரிக்க முடியாதது. இந்த நாடாளுமன்றத்தில் என்னைப் பேச அழைத்தது, மகிழ்ச்சியை அளித்துள்ளது. அண்டை நாட்டுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே உள்ள உறவு வரலாற்றை விட பழமையானது. மாலத்தீவு இந்தியாவுக்கு ஒரு ஆதர்ச சக்தியாக திகழ்கிறது ”அப்போது பயங்கரவாதம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது .  “பாதுகாப்பு, பேரிடர், வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்தமட்டில், மாலத்தீவுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும். நாம் இந்த பாதையில் தொடர்ந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்” எனவும் மோடி குறிப்பிட்டார்.

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு செல்கிறார். அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவுடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.