போர்பந்தர்:

மக்களின் பணத்தை தனது நண்பர்களாக உள்ள தொழிலதிபர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் மீனவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘ குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின்னர் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். எங்களது ஆட்சியின் போது மீனவர்களுக்கு 25 சதவீத மானியத்தில் டீசல் வழங்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்னர் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் நண்பர்களாக உள்ள 10, – 15 தொழிலதிபர்களே காரணம். மீனவர்களுக்காக ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாத மோடி, தனது சில தொழிலதிபர்கள் நண்பர்களுக்கு துறைமுகத்தை பரிசாக அளித்துவிட்டார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். அப்போது முதல்வர் அலுவலகமும், சட்டமன்றமும் உங்களுக்காக திறந்திருக்கும். அப்போது உங்களின் மனதில் உள்ளதை எங்களிடம் கூறுங்கள். தற்போது வரை, பணக்காரர்களுக்காக மட்டும் கதவு திறந்துள்ளது. அவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கிறது. உங்களின் குரல் அவர்களை சென்றடையவில்லை’’ என்றார்.