டில்லி
“தளபதி வழியில் பிரதமர் மோடி நடக்க ஆரம்பித்துவிட்டார்” என்று ஆனந்தப்படுகிறார்கள் திமு.கவினர்.
அதிர்ச்சி அடைந்துவிடாமல் படியுங்கள்.
கடந்த மார்ச் 1ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடினார் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலி்ன். அப்போது அவர் இதுவரை இல்லாத வகையில், தனக்கு மாலை, சால்வை போன்றவைகளுக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக அளிக்கும்படி தி.மு.க. தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக புத்தகங்களை குவித்துவிட்டனர் தொண்டர்கள். பிற கட்சி பிரபலங்கலும் புத்தக பரிசே அளித்தனர். உதாரணமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் “குவாலிட்டி ஃபார் லீடர்ஷிப்” என்ற புத்தகத்தை வழங்கினார். திமு.க.வைச் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு நடமாடும் புத்தக அலமாரி ஒன்றை அளித்தார்.
தொடர்ந்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் புத்தக பரிசே ஸ்டாலினுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியும், இனி தனக்கு புத்தங்களை பரிசாக அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் உள்நாட்டுப்பயணத்தின் போது தனக்கு பூச்செண்டுகளுக்கு பதில் புத்தகங்கள் அல்லது கதர் துண்டுகள் பரிசளிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த கோரிக்கையை விடுத்திருக்கறது.
இதைவைத்துத்தான் தி.மு.க.வினர் “மு.க.ஸ்டாலின் வழியில் மோடி” என சமூகவலைதளங்களில் உற்சாகமாகச் சொல்கிறார்கள்.
ஆனால் பா.ஜ.கவினரோ, “பிரதமர் மோடி ஏற்கெனவே இதை வலியுறுத்தி இருக்கிறார். இதை தனது டிவிட்டர் பக்கத்திலும் மன் கி பாத் என்னும் ரேடியோ நிகழ்ச்சியிலும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஒரு முறை மோடி, ”யாரை வரவேற்பதாக இருந்தாலும் கதர்துண்டை பரிசளிப்பது பல ஏழை நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். நான் குஜராத் முதல்வராக இருந்த போது பூச்செண்டு கொடுத்து யாரையும் வரவேற்க மாட்டேன். புத்தகமோ கதர் துண்டோதான் தருவேன். நீங்கள் அளிக்கும் பூச்செண்டு ஒரே நாளில் வாடி விடும். ஆனால் புத்தகம் என்றும் அறிவை வளர்க்கும். நாம் அளிக்கும் பரிசை பெறுபவர் அதை உபயோகிக்க வேண்டும். நான் இங்கிலாந்து அரசியை சந்தித்த போது அவர் என்னிடம் ஒரு கதர் துண்டை காண்பித்தார். அது அவருக்கு மகாத்மா காந்தி திருமணப் பரிசாக அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார். நான் மெய் சிலிர்த்துப் போனேன் “ என மோடி தெரிவித்திருக்கறார்” என்கிறார்கள் பா.ஜ.கவினர்.
எப்படியோ, புத்தகங்களை பரிசளிப்பது நல்ல வழக்கம்தானே.. அதை அனைவருமே கடைபிடிக்கலாமே!