பெங்களூரு
பிரதமர் மோடி மீண்டும் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்னும் பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
கர்நாடகா தேர்தல் பிரசாரக் களம் சூடுபிடித்து வருவது தெரிந்ததே. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது தனக்கு பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பே அளிப்பதில்லை என குற்றம் சாட்டினார். மேலும் தனது பேச்சை ஒரு 15 நிமிடங்கள் அமர்ந்து கேட்பதற்கு கூட பிரதமரால் முடியவில்லை எனக் கூறினார். அதை ஒட்டி பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பதில் அளிக்கையில் சம்மந்தம் இல்லாமல் சோனியா காந்தியின் வெளிநாட்டு பூர்வீகத்தை பற்றி விமர்சித்துள்ளார்.
மோடி தனது பிரசாரத்தில், “ராகுல் காந்தி அவர் ஆசைப்பட்டபடி 15 நிமிடங்கள் எனக்கு முன்னால் பேசட்டும். கர்நாடகா மாநிலத்தில் அவருடைய கட்சி செய்துள்ள நற்பணிகள் பற்றி பேசட்டும். அதை அவர் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது அவருடைய தாயின் தாய் மொழியிலோ பேசட்டும் ஆனால் அதை அவர் எந்த ஒரு துண்டுச் சீட்டையும் பார்த்து படிக்கக் கூடாது.” என கூறி உள்ளார்.
ஏற்கனவே கடந்த 2014 மக்களவை தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ்,, ”சோனியா இந்த நாட்டின் மருமகள். அவர் நமது அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர். அவருக்கு அவருடைய குடும்பத் தலைவி ஆகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவி ஆகவும் உரிமை உள்ளது. ஆனால் பிரதமராக உரிமை இல்லை” எனக் கூறி உள்ளார்.
அமித்ஷா தற்போதைய கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில், “ராகுல் பாபாவால் மோடி அரசின் எந்த சாதனையையும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இத்தாலிய நாட்டு கண்ணாடி அணிந்துள்ளார்.” என தேவை இல்லாமல் இத்தாலி நாடு பற்றி விமர்சித்துள்ளார்.
ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாரை அந்நாட்டின் பிரதமர் இவ்வாறு விமரிசிப்பது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இந்தச் செயலை பிரதமர் மட்டுமின்றி அமித் ஷா உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் செய்வது பொதுமக்களுக்கு அவர்கள் மீது எரிச்சலை உண்டாக்கி வருகிறது.