நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு பாராளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்புக் கூட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பதை அடுத்து இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் வன்முறை, சீன எல்லை அத்துமீறல்கள் போன்ற பிரச்னைகள் குறித்தும் அதானி நிறுவன முறைகேடு விவகாரம், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலியுறுத்திவருகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்பட்டிருக்கிறது என்பது குறித்த அலுவல் விவரங்கள் முறையாக வெளியிடப்படாதது குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.