டில்லி
நாளை நடைபெறும் தேர்தலையொட்டி பா ஜ க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை இன்று மோடி கூட்டியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பா ஜ க கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே நடந்த ஜனாதிபதி தேர்தலில், 21 செல்லாத ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவர் பா ஜ க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் போடப்பட்டவை. எனவே மீண்டும் அந்த தவறு துணை ஜனாதிபதி தேர்தலில் நடைபெறுவதை தடுக்க இன்று மோடி பாராளுமன்றத்தில் உள்ள பாலயோகி கலையரங்கத்தில் உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் பா ஜ க வும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் மாதிரி வாக்குச்சீட்டை வைத்து விளக்கம் அளிப்பதுடன், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதற்கு மாதிரி தேர்தலும் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாதிரி வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் கலந்துக் கொண்டு வாக்களிப்பார் எனவும் தெரிய வருகிறது.