டில்லி
சந்திரயான் 2 விண்கலம் குறித்து இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் பாதைக்குள் நுழைந்து நிலவுக்கு 28 கிமீ உயரத்தில் நிலவைச் சுற்றி வருகிறது. நிலவில் தரை இறங்க வேண்டிய பகுதியான விக்ரம் லாண்டர் நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது. இதனால் சோர்வுற்ற விஞ்ஞானிகளுக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ”இந்தியா தனது விஞ்ஞானிகளால் பெருமை அடைந்துள்ளது. அவர்கள் எப்போதும் தங்கள் மிகச் சிறந்த அணியால் இந்தியாவைப் பெருமை அடைய வைப்பார்கள். தற்போதைய நிலையில் தைரியமாக இருப்பது அவசியம். நாம் தைரியமாக இருக்கிறோம்.
இஸ்ரோ தலைவர் நமக்கு சந்திரயான் 2 பற்றிய அப்போதைய செய்திகளை உடனுக்குடன் அளித்து வருகிறார். நாம் தொடர்ந்து நம்பிக்கையுடன் மேலும் கடினமாக உழைத்து நமது விண்வெளி நிகழ்வுகளில் சாதனைபுரிவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “சந்திரயான் 2 விண்கலப் பணியில் சிறிய பணியை அளித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். உங்களுடைய திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.
உங்கள் உழைப்பு வீண் போகாது. இந்த தடைகளைத் தாண்டி மேலும் முன்னேறி இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனைகள் படைக்க இது ஒரு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.” என பாராட்டி உள்ளார்.