நான் இந்து விரோதி கிடையாது. மோடி விரோதி. மத்திய அமைச்சர் ஹெக்டேயின் விரோதி, அமித்ஷாவின் விரோதி என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். அவர்கள் எல்லோரும் என்னை பொருத்த வரை இந்துக்களே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே தெற்கு கான் கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசுகையில், ‘‘செக்ஸி துர்கா என்று ஒரு படத்திற்கு இயக்குனர் சசிதரன் பெயர் வைத்தார். இந்த படம் இந்து பற்றி கிடையாது. அதோடு இந்துத்வாவுக்கு எதிரானதும் கிடையாது. எனினும் இந்த படத்தை இந்துக்களுக்கு எதிரானது என்று சிலர் எதிர்க்கின்றனர்.

கர்நாடகா அரசிடம் இருந்து நான் நிலம் பெற்றிருப்பதால் இந்துத்வாவுக்கு எதிராக பேசுவதாக கூறுவது தவறு. என்னிடம் போதுமான நிலமும், பணமும் உள்ளது. அரசிடம் இருந்து நிலம் பெற வேண்டிய அவசியம் கிடையாது.

கொலையை ஆதரிப்பவன் இந்துவாக இருக்க முடியாது. என்னை இந்து விரோதி என்று கூறுபவர் இந்துவாக இருக்க முடியாது. அதேபோல் கொலை செய் என்று கூறுபவனும் என்னை பொருத்த வரை இந்துவாக இருக்க முடியாது.

எனது நண்பர் கவுரி சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை சிலர் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. இது சமூகத்திற்கு நல்லது கிடையாது. இத்தகையவர்களை தான் மோடி பின் தொடர்கிறார். இதை கொண்டாடதீர்கள் என்று ஏன் பிரதமர் கூறவில்லை. ஒரு உண்மையான இந்து இதை கொண்டாடமாட்டான்.
இந்த பூமியில் இருந்து ஒரு மதம் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு அமைச்சரின் பேச்சை பிரதமர் தட்டி கேட்டிருக்க வேண்டும். இதை தட்டிக் கேட்காத பிரதமரை நான் இந்து இல்லை என்று தான் கூறுவேன். பிரதமரை நான் ஒரு கட்சியில் இருந்து வந்தவர் என்ற ரீதியில் பார்க்கவில்லை. நான் அவருக்கு வாக்களித்தேனா இல்லையா என்பது பிரச்னை கிடையாது. ஆனால் அவர் தான் எனக்கு பிரதமர். அவரை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது’’ என்றார்.