வாஷிங்டன்
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாடர்னா மற்றும் பிஃபிஸர் நிறுவன தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனையை முடித்துள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டு அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தாங்க:ள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி கடைசிக் கட்ட ஆய்வின் முடிவுகளின்படி 94.1% திறன் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும் இந்த தடுப்பூசியின் செயல் திறன் அனைத்து வயது, இனம் மற்றும் பாலினத்தவருக்கும் எவ்வித பக்க விளைவும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிறுவனம் கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு இந்த மருந்தைச் செலுத்திச் சோதித்துள்ளது. அந்த சோதனையில் நோயாளிகளுக்கு 100% பலன் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவசர பயன்பாட்டுக்கு நிறுவனம் அனுமதி கோர உள்ளது.