ஷார்ஜா

மொபைலை வாங்கிய வணிகர்கள் அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டு எடுத்து வாடிக்கையாள்ர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

பழைய மொபைலை விற்கும் போது பலரும் அதில் உள்ள புகைப்படங்களை அழித்து விட்டு விற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆயினும் அதை திரும்ப எடுக்க முடியும் என்பதை பலர் அறியவில்லை. ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் பழைய மொபைலை வாங்கிய வணிகர்கள் சிலர் அதில் அழிக்கப்பட்ட புகைபடங்களை திரும்ப எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படங்களில் பல அந்தரங்க புகைப்படங்களாக இருந்துள்ளன. அவைகளை காட்டி மிரட்டி அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான பணம் பெற்றுள்ளனர். இது குறித்து பலர் அமீரக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அமீரக காவல்துறையினர் இது போல மிரட்டியதாக 21 வழக்குகள் வந்துள்ளதாகவும் அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் மொபைல் வணிகர்கள் ஆவார்கள். இது குறித்து அமீரக காவல்துறை படங்களை அழிக்கும் போது அவற்றை ஈ மெயிலில் பதிந்திருந்தால் அதையும் அழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி விற்கும் முன்பு தொழிற்சாலை நிலைக்கு (FACTORY RE SET) செய்த பிறகு விற்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.