சென்னை: செல்போன் திருடர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை ’ரியல் ஹீரோ’ என பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார். அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன்களை பறித்துக்கொண்டு ஓடும் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும், முகத்தை மூடியபடியும் பயணித்த இரண்டு நபர்கள், சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாதம் உதவி யாளர் ஆண்டலின் ரமேஷ், செல்போன் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற திருடர்களை, தனது இருச்சகர வாகனத்தில் துரத்திச்சென்று சென்னை காவலர் ஒருவர் மடக்கிப் பிடித்தார். அப்போது, அவரை கீழே தள்ளிவிட்டு, அவர்கள் தப்பிக்க முயற்தால், வாகனத்தை விட்டு கீழே இறங்கிய காவலர் கொள்ளையரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி, கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்தார். மற்றொருவர் தப்பிச்சென்றுவிட்டார்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையின் தலைமறைவாக இருந்த கொள்ளையனின் கூட்டாளிகள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து அந்த சிசிடிவி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,” இது ஏதோ திரைப்படத்தில் வந்த காட்சி அல்ல. நிஜ ஹீரோ சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் ஆண்டிலின் ரமேஷ் தனியாக துரத்தி செல்போன் திருடர்களை பிடித்த காட்சி ” எனக் குறிப்பிட்டு அவரை பாராட்டியுள்ளார்.