மும்பை

செவ்வாய் அன்று இடிந்த விழுந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர் ஒருவர், தனது மொபைல் மூலம் தன் மகனிடம் பேசியதால் காப்பாற்றப்பட்டார்.

செவ்வாய் அன்று மும்பை காட்கோபரில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்ததில் உயிர் பிழைத்தவர்க்ளில் சிலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டனர்.  அப்படி சிக்கிக் கொண்டவர்களில் ஒருவர் 57 வயதான ராஜேஷ் தோஷி.  அவர் காப்பாற்றப்பட்ட கண்ணீர் சம்பவம் பின் வருமாறு :

ராஜேஷ் தோஷி கட்டிடம் விழுந்த போது இடிபாடுகளில் சிக்கி மயக்கம் அடைந்தார்.  எத்தனை நேரம் அப்படி இருந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை.  ஆனால் கண் விழித்ததும் தான் இடிபாடுகளுக்கிடையில் இருந்தது தெரிய வந்தது.  வெளியே வர முயன்றவருக்கு கால்கள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டிருப்பது புலனானது.  என்ன செய்வதென்று தவிக்கையில் அவர் எப்போதும் பாக்கெட்டில் வைத்திருக்கும் மொபைல் ஃஃபோன் நினைவுக்கு வந்தது.

ராஜேஷ் தோஷியின் மனைவி

மொபைலை எடுத்து தன் மகனை அழைத்தார்.  அவர் மனைவியும், மகனும் அவருக்கு என்ன ஆனதோ என பயத்தில் இருந்தனர். அவர் மனைவியின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.  அந்த நேரத்தில் அவர் மொபைலில் இருந்து அழைப்பு வந்தது.  தான் உள்ளே மாட்டிக் கொண்டிருப்பதாகவும் தனது கால்கள் சிக்கிக் கொண்டிருப்பதால் வெளியே வர முடியவில்லை என தெரிவித்தார்.

உடனே தேட ஆரம்பித்த தீயணைப்பு வீரர்களால் எட்டு மணி நேரம் கழித்துத்தான் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடிந்தது.  ஒரு கயிறை உள்ளே செலுத்தி அவரைக் கட்டி மேலே இழுத்தனர்.  மேலே வந்தவரின் முகமெங்கும் புழுதி படிந்து மூச்சு விடவும் இயலாமல் இருந்தார்.  அவருக்கு பழரசம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பின் அவரை அருகிலுள்ள சாந்திநிகேதன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது