டில்லி,

பிரபல மொபைல் போன் நிறுவனமான விவோ, ஐபிஎல் கிரிக்கெட் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்ஷர்சிப்பை ரூ.2199 கோடிக்கு எடுத்து விவோ மொபைல் நிறுவனம் மீண்டும் டைட்டிலை தக்க வைத்துள்ளது.

2018ம் ஆண்டு முதல் 2022 வரை 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான விவோ பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008  ஆண்டு முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான  டி-20 கிரிக்கெட் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஷிப்பை பெப்சி நிறுவனம் எடுத்திருந்தது. அதையடுத்து சமீபத்தில், இத்தொடரின் டைட்டில் ஸ்பான்ஷர்சிப்பை பிரபல  சீன மொபைல் நிறுவனமான விவோ கைப்பற்றியது.

இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுக்கான (2018-2022) ஒப்பந்தத்தையும் விவோ நிறுவனமே மீண்டும் பெற்றுள்ளது.

வருடத்திற்கு ரூ. 439.80 கோடிகள் என்ற விதத்தில் (தோராயமாக 440 கோடிகள்)  5 ஆண்டு களுக்கும் சேர்த்து  மொத்தமாக ரூ. 2199 கோடிக்கு ஏலம் எடுத்து, தனது டைட்டிலை மீண்டும்  தக்க வைத்துக்கொண்டது.

இது கடந்தமுறை நடைபெற்ற ஏலத்தைவிட 554 சதவிகிதம் அதிகம் என ஐபிஎல் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்கும் என பிசிசிஐ., தெரிவித்துள்ளது.

இந்த உரிமம் பல்லாயிரம் கோடிக்கு ஏலம் போகும் என பிசிசிஐ., எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அடுத்த ஆண்டு (2018) முதல் ஐபிஎல் போட்டியில் மீண்டும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இணைய இருப்பதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.