சென்னை: தமிழ்நாட்டில் சோதனை முறையாக பிப்ரவரி 1ந்தேதி முதல் மொபைல் ஆப்-மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, நுகர்வோரே மின்சாரக் கட்டணத்தை கணக்கிடும் வகையில், புதிய கைப்பேசி செயலியை (Mobile App) தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில், மின் கட்டண ரசீது குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

மின் வாரியத்தின் பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது சோதனை முறையில் செயலின் மூலம் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக வரும் 1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில், மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, சோதனை செய்யப்பட உள்ளது.

இந்த செயலியின் சாதக, பாதகங்களை, நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தலைமையகத்துக்கு விவரங்களை அனுப்ப ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.