சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரும்பாலான கட்சிகள் சார்பில், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என அக்கட்சியின்  துணைத்தலைவர் மகேந்திரன்  கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில், கோவையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் , வந்திருந்த அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த மகேந்திரன்,  கோவை மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக அளவில் ஆதரவு இருக்கிறது என்று கூறியதுடன், தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம், மாற்றத்திற்கான வேட்பாளராக நான் இருப்பேன்  என்றார்.

மேலும், மநீம கட்சி சார்பில், தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை  வெளியாகும் என்றவர், விரைவில் தேர்தல் அறிக்கை  வெளியிடப்படும் என்றும் கூறினார்.