நாக்பூர்
பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளில் பாதுகாப்பு எச்சரிக்கை தரப்படவில்லை என மகாராஷ்டிரா அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாயிகளால் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக உபயோகப்படுத்தப் படுகின்றன. இவைகளை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள் பலர் இந்த ரசாயனம் கலந்த மருந்துகளை பயிர்களுக்கு தெளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசின் விவசாயக் கட்டுப்பாட்டுத் துறை பிரிவின் அதிகாரியான திவாரி ஒரு அறிக்கை அளித்துள்ளார். அதில், “பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பற்றிய எந்த ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையும் தருவதில்லை. இதனால் பல நேரங்களில் அதை தெளிக்கும் விவசாயிகளுக்கு ஆபத்து உண்டாகிறது. சென்ற வருடம் மட்டும் பருத்திச் செடிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் போது சுமார் 39 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
அது மட்டும் இன்றி அதனால் நூற்றுக் கணக்கான விவசாயிகள் இன்னும் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இது குறித்து எங்கள் துறை நடத்திய ஒரு சர்வேயில் பல விவசாயிகள் இந்தப் பன்னாட்டு பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பற்றி புகார் அளித்துள்ளனர். குறிப்பாக நேடிவோ, கான்ஃபிடோர், ரீஜண்ட், லார்வின் ஆகிய பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதினால் பல விவசாயிகளுக்கு வாந்தி, உடலில் புண்கள், கண் எரிச்சல் ஆகியவை உண்டாவதாக தெரிவித்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் பல பயிர்களை பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு பூச்சி அரிப்பு என்பது பெரும் நஷ்டத்தை உருவாக்குகிறது. எனவேதான் அவர்கள் பூச்சிக் கொல்லி மருந்தை உபயோகித்து வருகின்றனர். இது போல அபாயகரமான மருந்துகளை தடை செய்ய அரசு உத்தேசித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.