கொரோனா பாதித்த எம்.எல்.ஏ. கவசம் அணிந்து ஓட்டுப்போட அனுமதி..
9 மாநிலங்களில்19 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து, இந்த எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய நடக்கும் தேர்தலில் 4 பேர் போட்டியிடுகிறார்கள்.
அண்மையில் காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங் ஆகிய இரு வி.ஐ.பி.க்கள் இதில் அடக்கம்.
கடும் போட்டி நிலவுவதால், கொரோனா பாதிப்பு உள்ள நிலையிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குனால் சவுத்ரி என்பவர் ஓட்டளிக்க விரும்பினார்.
’தபால் மூலம் ஓட்டளிக்க விரும்புகிறீர்களா? அல்லது முழுக்கவச உடை அணிந்து நேரில் வந்து வாக்கு உரிமையைச் செலுத்த விரும்புகிறீர்களா?’’ எனத் தேர்தல் ஆணையம் அவரிடம் கேட்டது.
கவச உடை அணிந்து நேரில் வந்து ஓட்டளிக்க விரும்புவதாக எம்.எல்.ஏ. குனால் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் முழுக்கவச உடை அணிந்து, மத்தியப்பிரதேச சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளித்து விட்டுச் சென்ற பின் குனால், ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்.
கவச உடை அணிந்து எம்.எல்.ஏ. ஒருவர் ஓட்டளிப்பது இந்தியாவில் இது முதன் முறையாகும்.
– பா.,பாரதி