அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒண்டி வீரனின் 248வது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும். அதை போல தான் காஷ்மீர் விவகாரத்திலும் திமுக போராட்டம் அறிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் பால் விலை 3வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலையை ஏன் உயர்த்த வேண்டும் ? பால் உற்பத்தியாளர்கள் – மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது” என்று தெரிவித்தார்.