சென்னை: மறைந்த மு.க. முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மு.க. முத்துவின் சகோதரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. தந்தையின் கலையுலக வாரிசாக கருதப்பட்ட மு.க.முத்து தமிழ் சினிமாவில் நடிகராக இருந்தவர். பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 1970களில் ஹீரோவாக நடித்திருந்தார். சமையல்காரன் போன்ற இவரது படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள்.
‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ என்கிற பாடல்கள் மு.க. முத்து நடிப்பில் என்றென்றும் நினைவுகூரப்படுபவை. நடிப்பு மட்டுமின்றி பல்வேறு படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். தேவா இசையில் மாட்டுத்தாவணி என்கிற படத்தில் மு.க.முத்து கடைசியாக பாடல் பாடியிருந்தார்.
தீவிர அரசியலில் இடம்பெற விரும்பாதவர் மு.க.முத்து. எனினும், தந்தையிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தனியாக வசித்து வந்தார். மேலும் கடந்த 2023ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மு.க.முத்து மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் வைக்கப்படுகிறது மு.க.முத்து உடல்… இன்று மாலை இறுதி ஊர்வலம்…