டில்லி

பெரியார் மற்றும் அம்பேத்கரைப் பின்பற்றுவோருக்குக் கண்டனம் தெரிவித்த பாபா ராம்தேவ் கருத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.  அவர் தனது பேட்டியில் ”பெரியார் மற்றும் அம்பேத்கரின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.   பெரியார் மற்றும் அம்பேத்கரை பின்பற்றுபவர்க்ளைக் கண்டால் எனக்குப் பயமாக உள்ளது.   இவர்கள் அனைவரும் அறிவார்ந்த தீவிரவாதிகளாக உள்ளனர்.   அவர்களைப் போல் அசாதுதீன் ஓவைசியும் நாட்டைப் பிளவு படுத்த முயல்கிறார்” எனத் தெரிவித்தார்.

பாபா ராம்தேவ் தனது பேட்டியில் அறிவு தீவிரவாதம் என்னும் ஒரு சொல்லை பயன்படுத்தி உள்ளார்.  அவர் அந்த  பேட்டியில் இந்த சொல்லைத் தாமே உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் பெரியாரைப் பின்பற்றுவோர்  அந்த நிலையில் உள்ளனர்.” எனத் தெரிவித்திருந்தார்.அவர் கருத்து நாடெங்கும் கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.    பெரியார் மற்றும் அம்பேத்கரின் ஆதரவாளர்கள் கடந்த ஞாயிறு முதல் தொடர்ந்து  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   சமூகத் தளங்களான முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த பதிவு டிரெண்டாகி வருகிறது.   இந்த டிரெண்ட் இன்றும் அதிகரித்து முதல் இடத்துக்கு வந்துள்ளது.

பாபா ராம்தேவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தந்தை பெரியார் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்காகப் போராடினார். பெண் உரிமைக்குக் குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார். அவரது கொள்கைகளை தி.மு.க. பாதுகாக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து பாபா ராம்தேவ், “கடந்த இரண்டு மூன்று தினங்களாக பெரியாரைப் பின்பற்றுவோர் என் பின்னால் அலைகின்றனர்.   பெரியார் உயிருடன் இருந்த போது கடவுள்களுக்குச் செருப்பு மாலை அணிவித்தார். அத்துடன் ராமரையும் கிருஷ்ணரையும் செருப்பால் அடித்தார். இப்போது அவ்ர் உயிருடன் இல்லை.  எனது காலத்தில் அவர் இருந்திருந்தால் அவரை பலர் செருப்பால் அடித்திருப்பார்கள்.  அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்.  ஆனால் நான் அப்போது இல்லையே, என்ன செய்வது?” எனப்  பதில் அளித்துள்ளார்.