சென்னை:
திமுக பொருளாளர் ஸ்டாலின். தனது சிகிச்சைக்காக, இன்று குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்கிறார் என்று தி.மு.க. கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடிந்து நேற்று இரவு சென்னை திரும்பினார் ஸ்டாலின்.
இன்று ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானம் மூலம் அவர் லண்டன் செல்கிறார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும் செல்கிறார்கள்.
“ஒரு வாரத்தில் திரும்பும் அவர், வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்துவார்” என்று தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் சிகிச்சைக்காக செல்வதாக தகவல் பரவியுள்ளது. ‘உணவு குழாயும், இரைப்பையும் இணையும் இடத்தில் ஸ்டாலினுக்கு மிகச் சிறிய கட்டி இருக்கிறது. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது இது தெரிய வந்தது. கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று குடும்பத்தினர் பதறினர். இதையடுத்து லண்டன் சென்று டெஸ்ட் எடுத்தார் ஸ்டாலின். அது கேன்சர் கட்டி அல்ல என்றும், அறுவை சிகிச்சை ஏதும் தேவைில்லை என்றும் அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரம், தொடர் சிகிச்சை அவசியம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவ்வப்போது லண்டன் சென்று சிகிச்சை எடுத்துவருகிறார் ஸ்டாலின். தற்போதும் சிகிச்சைக்காகவே செல்கிறார்” என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து ஸ்டாலினோ, தி.மு.க. கட்சியோ அதிகாரபூர்வமா எதுவும் தெரிவிக்கவில்லை.