கவுகாத்தி
மிசோரம் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் முதல் முதலாக ஒரு பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் பொதுவாக மக்களவை தேர்தல்களின் பெண்கள் போட்டியிடுவது மிகவும் குறைவாகும். அப்படி போட்டியிடும் பெண்களிலும் பெரும்பாலானோர் வெற்றி பெறுவது கிடையாது. அத்துடன் அரசியல் கட்சிகளிலும் முக்கியமான பதவிகளில் பெண்கள் யாரும் கிடையாது. பொதுவாக சொல்லப் போனால் இந்த பகுதிகளில் பெண்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.
வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் முதல் முறையாக ஒரு பெண் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் லால்தலாமுவானி என்பதாகும். அவர் இந்தப் பகுதியின் பூர்வ குடியான மிசோ யூதர் வகுப்பை சேர்ந்தவர்.
சுமார் 63 வயதாகும் லால்தலாமுவானி ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தப் பகுதியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மிகவும் பாடுபட்டுள்ள அவர் ஏற்கனவே 2018 ஆம் வருடம் நடந்த மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டி இட்டுள்ளார். ஆனால் அவருக்கு 69 வாக்குகள் மட்டுமே அப்போது கிடைத்தன.
இது குறித்து லால்தலாமுவானி, “நான் மிசோரம் மாநில மக்களவை தேர்தலில் முதல் பெண் வேட்பாளராக போட்டி இடுவதில் மிகவும் பெருமை அடைகிறேன். நான் கடவுளின் அனுமதி பெற்ற பிறகே தேர்தலில் போட்டி இடுகிறேன். இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட அதிகமாக பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆயினும் பெண்களுக்கு இங்கு சரியான பிரதிநிதிகள் இல்லை.” என கூறி உள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இந்த தொகுதியில் லால்தலாமுவானியை எதிர்த்து 5 ஆண் வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர். மொத்தம் 7,70,395 வாக்காளர்களில் 4,02,408 பேர் பெண்கள் ஆவார்கள்.