ய்ஸ்வல்

மிசோ மொழி தெரியாமல் இந்தி மட்டும் தெரிந்த தலைமைச் செயலரை மாற்ற மிசோரம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிசோரம் மாநில முதல்வர் சோராம்தாங்கா இன்று மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர், “குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரியான லால்நுர்மா மிசோராம் மாநிலத் தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றதால் நான் கூடுதல் தலைமைச் செயலராக உள்ள ராம்தங்காவை தலைமைச் செயலராக நியமிக்க வேண்டுகோள் விடுத்தேன்.  ஆனால் உள்துறை அமைச்சகம், திருமதி ரேணு சர்மாவைத் தலைமை செயலராக நியமித்துள்ளது.

பெரும்பாலான மிசோரம் மக்கள் இந்தி மொழி அறியாதவர்கள் ஆவார்கள்.  ஒரு சில அமைச்சர்களால் மட்டுமே இந்தியை புரிந்து கொள்ள முடியுமே தவிரப் பலருக்கு இந்தி மொழி புரியாது.  இந்நிலையில் இம்மாநிலத் தலைமைச் செயலருக்கு மிசோ மொழி தெரிந்திருப்பது அவசியமாகும்.   இது வரை வட்டார மொழி தெரியாதோரை இந்திய அரசு மாநிலத் தலைமைச் செயலராக நியமித்தது இல்லை.

தவிர மிசோரம் மக்களோ அமைச்சர்களோ ஆங்கிலம் சிறிதும் அறியாதவர்களாக உள்ளனர்.   தலைமைச் செயலர் ரேணு சர்மாவுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்னும் நிலை உள்ளது.  இவருக்கு மிசோ உள்ளிட்ட வடகிழக்கு பகுதி மொழி எதுவும் தெரியாது என்பதால் திறம்பட பணியாற்ற முடியாது எனச் சந்தேகம் உள்ளது.

இந்த உண்மைகள் மற்றும் தற்போதைய நிலைமையை முந்தைய காங்கிரஸ் முதல் அமைச்சரும் மற்ற எதிர்க்கட்சியினரும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர்.  எனவே இதில் உள்துறை அமைச்சர் தலையிட்டு மிசோ மொழி தெரிந்த ஒருவரைத் தலைமைச் செயலராக நியமித்து திருமதி ரேணு சர்மாவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.