இலங்கையில் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஒருங்கினைத்து இலங்கை அரசு ஏற்பாடு கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது. அதன்படி இன்று மட்டகளப்பில் ஒரு கூட்டம் நடந்தது.
அதில் கலந்துகொண்டு பேசியவர்கள், “காணாமல் போனவர்கள் தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மரண சான்றிதழ்களில், மரணத்திற்கான காரணம், `காணாமல் போனவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காணாமல் போன ஒருவருக்கு எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும்?” என்று கேட்டனர்.
மேலும், “காணாமல் போனவர்கள் என்று சொல்வதே தவறு. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு மரண சான்றிதழுக்கு பதிலாக காணாமல் போனவர்கள் என்ற சான்றிதழ் வழங்குவதா ஏற்கெனவே அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை” என்று தெரிவித்தனர்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்படுவதாக வெளியாகியுள்ள சந்தேகம் குறித்தும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கவலையை தெரிவித்தனர்.