ஓசூர்:
கன்னட வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வந்தோம் என, கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த தொழிலாளிகள் தெரிவித்தனர்.
காவிரி நீர் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடகாவில் கலவரம் வெடித்துள்ளது. தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. தமிழர்கள் நடத்தும் கடைகள் அடித்து உடைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் நடத்தும் அடையாறு ஆனந்தபவன் ஓட்டல்கள், பூர்விகா மொபைல் நிறுவனம், டிராவல்ஸ் நிறுவனங்கள் கன்னட வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கு பணிபுரியும் ஊழயர்கள் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடந்தது.
அதில் தப்பி ஓடிவந்த தொழிலாளிகள் தமிழக எல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
அப்போது ஆனந்தபவன் ஊழியர்கள், “நாங்கள் கடையில் இருந்தோம். அப்போது ஒரு கும்பல் திடீரென உள்ளே நுழைந்தனர். எங்களை அதட்டி ஏதோ பேசும்படி கூறினார்கள். பேசினால் தமிழர் என்பது தெரிந்துவிடும் என்பதால் பேச மறுத்தோம். உடனே எங்ளை கடுமையாக தாக்கினார்கள்” என்று தெரிவித்தார்கள்.
தீயிட்டு எரிக்கப்பட்ட கேபிஎன் டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள், “ஒரு பெரும் கும்பல், நாங்கள் தங்கியிருந்த குடோனுக்கு வந்தார்கள். நீங்கள் தமிழர்கள்தானே என்று கேட்டு உருட்டுக்கட்டை மற்றும் கம்பிளால் அடித்தார்கள். உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடினோம். பிறகு அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தார்கள். அவர்களிடமிருந்து தப்பி, உயிர் பிழைத்ததே அதிசயம்தான்” என்று கண்ணீர்விட்டு கதறினார்கள்.