1-vija
சென்னை:
ர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கர்நாடக அரசுக்கு,  உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு 20 நாட்களுக்கு 12,000 கன அடி தண்ணீர் தினந்தோறும் தந்தே தீர வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள முடியாத சில கன்னட அமைப்பினர் தொடர்ந்து தமிழக மக்களின் ஓட்டல்களையும், சிறு கடைகளையும், 40 லாரிகளையும், பஸ் டெப்போவில் நிறுத்தி வைக்கப்படிருந்த 45 பஸ்களையும் எரித்து தமிழர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் அப்பாவி தமிழ் இளைஞரை கன்னட திரை உலகத்தை சேர்ந்த சிலர் மன்னிப்பு கேட்க சொல்லியும், அடித்தும் துன்புறுத்திய வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி தமிழக மக்களை மிகவும் வேதனை பட வைத்துள்ளது. இந்த நிகழ்வுகளை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
114 வருடங்களாக தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே நடக்கும் காவிரி நீர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வே ஏற்படாமல் நீண்ட நெடிய தொடர் நிகழ்வாகவே வருடந்தோரும் அரங்கேறி வருகிறது.
உண்மையில் இந்த தண்ணீர் பிரச்சனைக்கு மாநிலங்களுக்கிடையே நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால் தேசிய நதிகளை இணைப்பதால் மட்டுமே சாத்தியமாகும் என்று தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டும் பொருட்களையும், உடமைகளையும் அழித்தும் வன்முறையை அதிக அளவு நிகழ்த்தும் வரை ஜெயலலிதா அமைதி காத்தது வேதனைக்குரியது.
எனவே கர்நாடக மக்களின் இந்த தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தேமுதிக சார்பில் வரும் வெள்ளிக்கிழமை 16.09.2016 அன்று மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம் தேமுதிக தலைமை கழக அலுவலகம் முன்பு நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் அறிவித்துள்ளார்.