நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் அவர்களது முகநூல் பதிவு:

சிறையில் இருக்கும் சசிகலா இதுவரை அதிமுக உறுப்பினர் தான். அவரை அக் கட்சி நீக்கவில்லை.

ஆனால் அவர் டிடிவி கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இப்போது திவாகரன் கட்சிக்கும் அவரே பொதுச் செயலாளர்.

இந்த அதிசயம் அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாத்தியம்.

அ.தி.மு.க.வின் கட்டமைப்பு என்பது “தலைகீழ் பிரமிடு”.

அதாவது கட்சியின் “டாப் போஸ்ட்” ஆன பொதுச் செயலாளர் பதவிக்கு முதலில் தேர்தல் நடக்கும்.

ஜெயலலிதா இருந்தவரை ஒரு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படும்.

ஜெயலலிதாவின் பெயரில் பல வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படும்.

போட்டி இல்லாமல் அவர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.

பிறகே கிளைக்கழகம் வரையிலான தேர்தல்கள். பிற கட்சிகளில் அனேகமாக இது தலைகீழாக இருக்கும்.

இந்தச் சூழலில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் நடந்து வருக்கிறது. 2018 ஜூன் மாதத்தோடு “ஒன்றரைக் கோடி” உறுப்பினர் பதிவுகளும் காலாவதி ஆகிவிடும்.

இன்றைய நிலையில் அதிமுகவின் உயர் பதவிகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்.

ஆனால் அவர்களை நியமித்துத் திருத்தப்பட்ட விதிகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகாரம் தரவில்லை.

அதற்குள் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டு ஆயிரக்கணக்கான நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.

அது குறித்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அ.தி.மு.க விதிகளைத் திருத்திய பொதுக்குழு பற்றிய வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சம்பந்தமான தன ஆணையில் இதைத் தெளிவாக்கி உள்ளது.

18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கும் தீர்ப்பும் வெளிவரும் நிலையில் உள்ளது.

இரட்டை இலை ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டெல்லி ஹைகோர்ட்டில் நடந்துவரும் வழக்கும் நிறைவு பெறும்ம் தருவாயில் உள்ளது.

அ.தி.மு.க. அமைப்புச் சட்டப்படி இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்துப் போடும் அதிகாரம் பொதுச் செயலாளரிடம் தான் உள்ளது.

ஆர்.கே.நகரில் தேர்தலை நடத்தியவர் தமிழ்நாடு அரசு அதிகாரி. எனவே அவர் பெரிய பிரச்னையைக் கிளப்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கர்நாடகா தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் பெற சமர்ப்பிக்கவேண்டிய மனுவைக் காலதாமதம் செய்து சுயேட்சைச் சின்னத்திலேயே அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.

எம்.ஜி.ஆர். காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை இப்படி நடந்ததே கிடையாது. ஒருமுறை அதிமுக வேட்பாளர் முனியப்பா கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றும் இருக்கிறார்.

காவிரிப் பிரச்னை இவ்வளவு தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் கர்நாடக மண்ணில் வெற்றி பெறவேண்டிய ஒரு வாய்ப்பை அ.தி.மு.க ஏன் விட்டுக் கொடுத்தது?

பாரதிய ஜனதாவுக்குத் தர்மசங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காகவா? அல்லது சின்னத்தை ஒதுக்கவேண்டிய கர்நாடக அரசு தேர்தல் அதிகாரிகள் அதற்கு ஒப்புதல் தரமாட்டார்கள் என்று தலைமை நினைக்கிறதா?

தேர்தல் ஆணையம் ஒத்துக்கொள்ள மறுத்தால் டெல்லி ஹைகோர்ட் வழக்கு பாதிப்படையும் என்று நினைக்கிறார்களா?

இதில் ஓபிஎஸ் மனவருத்தம் அடைந்துள்ளார் என்றும் அவரைச் சமாதனப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன என்றும் எனக்குத் தகவல் கூறுகிறது.

சிறையில் இருக்கும் சசிகலாவின் “கியூரேட்டிவ் பெட்டிசன்” (விடுதலை மனு) விரைவில் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் பட்சிகள் கூறுகின்றன.

இப்படி இக்கட்டான நிலையில் திடீரென்று “சகோதரச் சண்டை” (திவாகரன்-தினகரன் மோதல்) ஏன் வெடிக்கிறது?

இப்படி எண்ணற்ற கேள்விகள்..ஏராளமான வினாக்கள்.. எதற்கும் பதில் இல்லை.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே

என்னன்னமோ நடக்குது, மர்மமா இருக்குது

கண்ணிலே கண்டதும் கனவாய் போனது

காதிலே கேட்டதும் கதியாய் ஆனது