மணிப்பூர் தலைநகர் இம்பால் நகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் மீராபாய் சானு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுகளும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பின்தங்கிய கிராமத்தில் இருந்து இம்பால் நகரில் உள்ள பயிற்சி மையத்திற்குச் சென்று தொடர் பயிற்சியில் ஈடுபட்ட மீராபாய் இந்த சாதனை புரிய காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

30 கி.மீ தொலைவில் உள்ள பயிற்சி மையத்திற்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், தனது கிராமத்தின் வழியாக செல்லும் மணல் லாரிகளில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிப் பயணம் செய்து பயிற்சி மையம் செல்வார்.

இப்படி, அவருக்கு உதவிய லாரி ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று அவரது வீட்டிற்கு அழைத்து உபசரித்தார்.

மேலும், “தான் இந்த நிலைக்கு வருவதற்கு உங்கள் பங்களிப்பும் உள்ளது, உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் தயக்கமின்றி என்னிடம் கேளுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

மீராபாய் சானுவின் இந்த நன்றி உபசரிப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.