மாக்கும்:

தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க அசாமில் வாழும் சீனர்கள் வாக்களிப்பதை  கடமையாகக் கொண்டிருக்கின்றனர்.


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அசாமில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற நூற்றுக் கணக்கான ஆண்களை சீனாவிலிருந்து அழைத்து வந்தனர்.
காலப் போக்கில் உள்ளூர் பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொண்டு அசாமியர்களாகவே மாறினர்.

1962-ல் இந்திய-சீன யுத்தத்துக்குப் பின் இவர்கள் ராஜஸ்தானில் உள்ள தியோலி முகாமில் சிறை வைக்கப்பட்டனர். சிலர் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் அசாமுக்கே திரும்பினர். பெரும்பாலோர் மாக்கும், திகோலி, பனிட்டோலா மற்றும் தின்சுக்கியா ஆகிய இடங்களில் குடியேறினர்.

இவர்கள் அசாமில் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். தாங்களும் இந்தியர்கள்தான் என்பதை காட்ட தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கின்றனர்.

வெற்றியை நிர்ணயிப்பவர்களாக இவர்கள் இல்லாவிட்டாலும், வாக்களிப்பதை தார்மீக கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.