ஜார்க்கண்டில் முஸ்லிம்கள், கிறித்துவர்களின் கோரிக்கைகளை பாஜக புறக்கணித்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூறும் நிலையில், அனைவருக்கும் சமமான முறையிலேயே தங்களின் அரசு செயல்பட்டுள்ளதாக பாஜக விளக்கம் அளிக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதல் 3 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 50 தொகுதிகளில் முடிவடைந்துள்ளது. 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 15 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் மைனாரிட்டி ஆதரவு மற்றும் பழங்குடிமக்களின் ஆதரவு பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
கிழக்கு ஜார்கண்டில் உள்ள ஜம்தாராவில் உள்ள ஒரு தேநீர் கடையில், பூத்நாத் சோரன் மற்றும் முகமது இக்பால் ஆகியோர் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தனது கொள்கைகளின் மூலம் சிறுபான்மையினரை அந்நியப்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பாஜகவின் வினோத் குமார் சிங், கட்சி “சப்கா சாத் சபா விகாஸ்” (கூட்டு முயற்சி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி) நிகழ்ச்சி நிரலை மட்டுமே பின்பற்றியுள்ளது என்று கூறுகிறார்.
பூத்நாத் சோரன் கிறித்துவ பழங்குடியினத்தவர். முகமது இக்பால் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். கிறித்துவ பழங்குடியினர் மற்றும் இஸ்லாமியர்கள், ஜார்க்கண்டின் மக்கள் தொகையில் முறையே 4,3% மற்றும் 14.53% உள்ளனர் என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பழங்குடியினர் ஜார்கண்டின் மக்கள் தொகையில் 26.3% அளவு உள்ளனர், இவர்களில் 91.7% மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்.
2000ல் பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட், தனது 4 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இப்போது பாஜகவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் இருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் கருத்தியல் நீரூற்றாக கருதப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவாக் சங்கம் மாநிலத்தின் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போர்டிங் பள்ளிகள் மற்றும் வித்யா பாரதியை நடத்தி வரும் வனவாசி கல்யாண ஆசிரமம் மூலமாக நுழைய முற்பட்டது. இந்த ஆசிரமம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி மற்றும் வில்வித்தை பயிற்சிகளையும் வழங்குவதாக அதன் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குந்தி மாவட்டத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை வைத்துள்ளதாகவும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பள்ளிகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறும் அம்மாவட்ட ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் சாஹூ, மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 1970ம் ஆண்டுகளில் மாநில தலைவராக இருந்த காலத்தில் இருந்தே ஏழை பழங்குடியின மக்கள், மத மாற்றம் செய்வதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதல்கள் 2017ம் ஆண்டில் பகிரங்கமாக வெளிவந்தது, மாநில அரசு ஜார்கண்ட் மத சுதந்திரச் சட்டம், 2017-ஐ இயற்றியது, இதன் மூலம் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்வதற்கு எதிரான தடைகளை விதிக்கும் நாட்டின் ஒன்பதாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உருமாறியது.
இச்சட்டத்தின் மூலம் மதமாற்றம் செய்ய மாவட்ட அதிகாரியின் ஒப்புதல் அவசியமாகிறது. வலுகட்டாயமாகவோ அல்லது ஆசை வார்த்தைகள் கூறியோ மதமாற்றம் செய்யப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையோடு, ரூபாய் ஐம்பதாயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதேநேரம், பட்டியலினத்தவர்கள், பட்டியலினத்தை சேர்ந்த பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் அதிகபட்ச தண்டனை வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்துள்ளது.
மாநிலத்தில் உள்ள கிறித்துவர்களை குறிவைத்தே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், இது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு உதவிட மாநில அரசு முயன்றிருப்பதாகவும் குற்றம்சாட்டும் பூத்நாத் சோரன், யாருமே தங்களுக்கு உதவிட முன்வராத போது, கிறித்துவர்கள் தான் உணவு மற்றும் கல்வியை தங்களுக்கு அளித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் எப்போதும் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழேயே இருப்பதாகவும், ஒரு சிறிய தவறு அல்லது கிறிஸ்தவமல்லாத பழங்குடியினருடன் சண்டையிடுவது போன்ற சூழல் உருவானால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குந்தி மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான ஜோசப் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.
சாய்பாசாவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இளைஞர் ஒருங்கிணைப்பாளரான மான்கி டூபிட், “ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க நேரடியாக ஒருபோதும் கேட்கவில்லை என்றாலும், பழங்குடி வாக்காளர்களிடையே சர்ச் செல்வாக்கை செலுத்துகிறது. மதமாற்ற எதிர்ப்பு மசோதா மற்றும் வெவ்வேறு கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பிறகு, கிறிஸ்தவ பழங்குடியினர் பாஜகவை தோற்கடிக்கக்கூடிய ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் முகமது இக்பாலுக்கு பாஜகவை எதிர்ப்பதற்கான காரணம் வேறாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தின் அராவைச் சேர்ந்த இக்பால், தனது குடும்பத்தினருடன் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜம்தாராவுக்கு குடிபெயர்ந்தார். தேசிய அரசு குடிமக்கள் பதிவு முழு நாட்டிற்கும் தொகுக்கப்படும் என மத்திய அரசு கூறியது, தனது எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதும் அவர், பீகாரில் இருந்து ஆவணங்களை பெற்று எனது குடியுரிமையை காட்டத் தவறினால் என் குடும்பத்தின் நிலை என்ன ஆகும் ? என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அறிவிப்பதற்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்தோடு, சட்டமன்றத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதமாக வங்கதேச நாட்டில் இருந்து குடியேறியவர்களை களையெடுக்க என்.ஆர்.சி மற்றும் குடிமக்கள் திருத்த மசோதா மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் சமீபத்தில் பேசியதற்கு பதிலளித்த இக்பால், இச்சட்டம் இந்துக்கள், கிறித்துவர்கள், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சேர்ந்த பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், இங்கு அகதிகளாக வரும்போது தானாகவே குடியுரிமையை வழங்கிவிடும். ஆனால் தானும், தனது குடும்பமும் அசாம் மாநிலத்தில் நடந்தது போல வெளியேற்றப்படும் வாய்ப்பே இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தின் எதிர்கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகியோர் குடியுரிமை சட்டத்திருத்தத்தையும், தேசிய அரசு குடிமக்கள் பதிவையும் எதிர்த்து வருகின்றனர்.
ராம்கர் மாவட்டத்தில் உள்ள மரியம் கதுனின் மன்வா கிராமத்தில், என்.ஆர்.சி பற்றிய பயம் மற்றும் வேலை இழப்பு ஆகியவை பெரிய பிரச்சினைகளாக இருந்தன. அதேநேரம், அவரது கணவர் அலுமுதீன் அன்சாரியை ஜூன் 2017ல் நகரத்தின் பிரதான பஜாரில் ஒரு கும்பல் கொன்றது.
கதுனின் வீட்டிற்கு செல்லும் பாதைக்கு எதிரே ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி வரும் ஃபரீத் அக்தர், ”கிராமம் மரியம் பேகத்துடன் நிற்கிறது. ஆனால் அவர்களுக்கு பெரிய பிரச்சினைகளாக என்.ஆர்.சி மற்றும் காலனி வளர்ச்சி பற்றாக்குறை இருக்கிறது. என் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர், என்.ஆர்.சி பயிற்சிக்கான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். எங்களுடைய வாக்குகள் உள்ளூர் பாஜக எம்.எல்.ஏவுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதால், அவர் எங்கள் சமூகத்திற்கு ஒன்றும் நல்லது செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
ராம்கர் மாவட்டத்தில் பெரும்பானால இஸ்லாமியர்களுக்கு கணிசமான அளவுக்கு விவசாய நிலங்கள் இல்லை. பெரும்பாலானோர் சிறு தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளை பெற்று தங்கியிருக்கிறார்கள். இங்குள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், தங்கள் சமூக உறுப்பினர்கள் உட்பட பல ஏழைகள் வேலை இழந்ததாக கூறும் சயாஸ் சையத், மன்வா கிராமத்தில் ஜே.எம்.எம். கொடியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வருகிறார்.
வினோத் குமார் சிங் போன்ற சிலர், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் பாஜக அரசு அந்நியப்படுத்துவதாக கூறுவது தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்றனர். இது தொடர்பாக மேலும் பேசிய வினோத் குமார் சிங், “ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமே, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அனைவருக்கும் சமமாகவே மாநில நலன் தொடர்பான பணிகளை பாஜக செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
ராம்கரின் சதர் கிராமத்தில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு பெற்றுள்ள கணேஷ் மஹோட்டா, ”இப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு கூட இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைத்துள்ளது. தலைகீழாக பாஜகவுக்கான ஆதரவும் இருக்கக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்துக்களின் வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக பலப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
சாந்தல் என்றழைக்கப்படும் ஜார்க்கண்டின் கிழக்குப் பகுதிகளில் கிறிஸ்துவ – இஸ்லாமிய மக்களின் இணைப்பு தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அதிக அளவில் உள்ளனர். கிறிஸ்வதர்கள் பெரும்பான்மையாக விவசாயத்தை தொழிலாக செய்வதோடு, அரசு பணியிலும் இருக்கும் அதேநேரம், இஸ்லாமியர்கள் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக உள்ளனர். தும்கா மாவட்டத்தில் உள்ள இந்தர்பானி கிராமத்தில் உள்ளவர்கள், விவசாய நிலம் உள்ள கிறிஸ்தவ மக்கள் மற்றும் பழங்குடியினருடன் கிராமத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக மேலும் விளக்கிய இந்திய சுரங்க நிறுவனங்களின் மேலாண்மை பேராசிரியர் பிரமோத் பதக், ”சாஹிப்கஞ்ச், பக்கூர் மற்றும் ஜம்தாரா மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சேர்ந்தே 30%க்கும் அதிகமான வாக்குவங்கியை கொண்டுள்ளவர்களாக உள்ளனர். இன்னும் சில தொகுதிகளில் இவர்களின் வாக்கு வங்கி 20%க்கு அருகில் இருக்கிறது. இதனால் நெருக்கமான போட்டி கூட பல தொகுதிகளில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த தேர்தலில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறும் கோல்ஹான் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் அலோக் நாத், 2014ம் ஆண்டைப் போல மக்கள் ஒரு நிலையான அரசாங்கத்திற்கு வாக்களிப்பார்கள் என்று கூற முடியாது என்றும், அப்போது பாஜகவுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை, ஆனால் இப்போது அதிக அளவிலான எதிர்ப்பை காண முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைவது பற்றிய வதந்திகள் எதிர்க்கட்சிகளால் பரப்பப்பட்டு வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஜார்கண்ட் பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில அளவிலான பாஜக தலைவர் ஒருவர், “களம் எங்களுக்கு கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைவதை காட்டவில்லை. நாங்கள் இரு கிறிஸ்துவ பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பல தலைவர்களை பாஜக கொண்டுள்ளது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைவார்கள் என்று கூறி, 10 முதல் 12 தொகுதிகளில் எங்களுக்கு எதிராக வாக்குகளை பெற எதிர்கட்சிகள் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகின்றன” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே எங்களுடைய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு ஆதரவான மனநிலை ஒருப்பதை எங்களுடைய கள ஆய்வு உறுதி செய்திருக்கிறது. இச்சமூக மக்களின் வாக்குகள் பல தொகுதிகளில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பொதுச்செயலாளர் விஜய் குமார் சிங், “கிறிஸ்துவ பழங்குடியினர் மற்றும் இஸ்லாமியர்களிடையே அரசாங்கத்திற்கு எதிரான கோபம், மதம் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக அதிகமாகியிருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆதரவாக அவர்கள் மாறியிருக்கலாம். ஆனால் எங்களது கட்சி அனைத்து பிரிவின் ஆதரவையும் பெறும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டதோடு, கிறிஸ்தவர்களையும் குறிவைத்து அரசு ஒரு சட்டத்தை கொண்டுவந்திருப்பதால் சிறுபான்மையின மக்களின் கோபம் அரசின் மீது இருப்பது தெளிவாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.