டெல்லி: இந்தியர்கள்  ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. போர் பதட்டம் காரணமாக அங்கு செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் கடந்த்  2023  அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து போர் நீடித்துக் கொண்டு வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட அதன் இரண்டு ஜெனரல்களின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் மிரட்டுகிறது.  இதுக்கு இன்னும் இஸ்ரேல்  கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், தாக்குதலுக்கு இஸ்ரேலை தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் அந்தந்த குடிமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மேலும் அந்நாட்டு மக்கள் இஸ்ரோல், ஈரான் போன்ற போர் பதற்றம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி ஆலோசனை கூறி உள்ளது.

இதைதொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையும், இந்தியர்கள் ஈரான், இஸ்ரேலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.  அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும்,  அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்,  இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 4 அன்று, ஏழு பேர் கொல்லப்பட்ட ஈரானிய தூதரகத்தின் மீதான தாக்குதலில் இந்தியா “கவலை” தெரிவித்தது, மேலும் வன்முறையைத் தவிர்க்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த ஆலோசனை கூறுகிறது. “அவர்கள் தங்கள் பாதுகாப்பைப் பற்றிய மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைக் கடைப்பிடிக்கவும், அவர்களின் இயக்கங்களை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”