மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து 3.7 கிமீ தொலைவில் உள்ள சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
சுற்றுசூழல் அமைச்சகத்தின் இந்த பரிந்துரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று அந்த குழு தெரிவித்துள்ளது.
₹202.36 கோடி மொத்த மதிப்பீட்டில் 16 ஏக்கர் நிலப் பரப்பில் மருந்து தயாரிப்பு வசதியை விரிவுபடுத்த மதிப்பீட்டுக் குழுவிடம் இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஏற்கனவே இந்நிறுவனம் சுமார் ₹174.36 கோடி முதலீடு செய்துள்ளது. தற்போது சுமார் ₹1.49 கோடியை மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கி இருக்கிறது.
சன் பார்மா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களின் மீது ஆய்வு செய்த இந்த குழு சில நிபந்தனைகளை விதித்துள்ளது “தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் எதுவும் தயாரிக்கக்கூடாது. தடை செய்யப்பட்ட எந்த மூலப்பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக அரசாங்கத்தின் அறிவிப்புகள்/வழிகாட்டுதல்களை நிறுவனம் கடைபிடிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளது.
சுத்தமான தண்ணீர் தேவை மற்றும் கழிவுகளை அகற்றுவதைக் குறைக்க தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
சன் பார்மாசூட்டிகல்ஸ் உறுதியளித்துள்ளபடி, ஜீரோ திரவ வெளியேற்றம் உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வளாகத்திற்கு வெளியே வெளியேற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆலையின் அன்றாட தேவைக்கு சுமார் 2,86,500 லிட்டர் தண்ணீர் தேவை படும் என்றும் அதில் 1,82,000 லிட்டர் சுத்தமான நீர் என்றும் கூறியுள்ள சன் பார்மா நிறுவனம், சுத்தமான நீர் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தண்ணீர் தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ரசாயன கழிவுகள், நச்சுப் பொருட்கள், ஆபத்தான மூலப்பொருட்கள் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகளை மிகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி சேமித்து வைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.