சென்னை: கள், ஆவின் நெய் தொடர்பாக பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை தொடங்கியதும், வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், கேள்வி நேரம் தொடங்கியது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினார்.
கள் இறக்க அரசு அனுமதி தருமா? ஆவின் போன்று கள் விற்பனை கூடங்கள் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். மேலும், கள் மீதான தடையை நீக்கி, கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசிலீப்பார் என்றார்.
இதைத்தொடர்ந்து, நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக் கூடம் அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் பொன்முடி, “376 பனை வெல்லம் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க பரிசீலனை செய்யப்படும், “என்றார்.
இதையடுத்து, பதநீர், கள் மீதான வழக்குகளை கள்ளச்சாராயம் காய்ச்சியது போன்ற வழக்குகளாக பதியக்கூடாது. கள் இறக்கினால் அது தொடர்பாக தனியாக வழக்கு பதிய வேண்டும் என்று உறுப்பினர் அசோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து ஆவின் நெய் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், ராஜ கண்ணப்பன், விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்ககாரர்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆவின் மூலம் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுகிறன. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது; ஆவின் நெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றதுடன் ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். “என்றார்.